களியக்காவிளை அருகே மண்ணுளி பாம்பை கடத்தி விற்க முயன்ற 3 பேர் கைது

களியக்காவிளை அருகே மண்ணுளி பாம்பை கேரளாவுக்கு கடத்தி விற்க முயன்ற 3 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மண்ணுளி பாம்பு, கார் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது.
களியக்காவிளை அருகே மண்ணுளி பாம்பை கடத்தி விற்க முயன்ற 3 பேர் கைது
Published on

களியக்காவிளை:

களியக்காவிளை அருகே மண்ணுளி பாம்பை கேரளாவுக்கு கடத்தி விற்க முயன்ற 3 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மண்ணுளி பாம்பு, கார் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது.

மண்ணுளி பாம்பு விற்பனை

குமரி மாவட்டத்தில் இருந்து ஒரு கும்பல் மண்ணுளி பாம்பை காரில் கடத்தி சென்று கேரள மாநிலம் பருத்திப்பள்ளி பகுதியில் விற்பனை செய்ய வந்திருப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பருத்திப்பள்ளி வனச்சரக அலுவலர் சுதீஷ் மற்றும் வனத்துறையினர் வினு, பிரவித், சுபாஷ், சரத், ஷிபு ஆகியோர் விரைந்து சென்று இந்த தமிழக கும்பலை கண்காணித்தனர். வனத்துறையினர் வருவதை அறிந்ததும் அந்த கும்பல் காரை தமிழக எல்லை பகுதிக்கு வேகமாக ஓட்டி சென்றனர். ஆனால் வனத்துறை அதிகாரிகள் அந்த காரை பின்தொடர்ந்து துரத்தி வந்து களியக்காவிளை அருகே உள்ள இஞ்சிவிளை பகுதியில் மடக்கி பிடித்தனர்.

தொடர்ந்து காரில் இருந்த மூன்று பேரையும் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சூரியக்கோடு பகுதியை சேர்ந்த வினு (வயது48), ஆறுகாணி பகுதி சேர்ந்த டைட்டஸ் (52), தங்கராஜ் (58) என்பது தெரிய வந்தது. இவர்கள் ஆறுகாணி மலைப்பகுதியில் இருந்து ஒரு மண்ணுளி பாம்பை பிடித்து, கேரளாவைச் சேர்ந்த பாம்பு கடத்தல் கும்பலிடம் விற்பனை செய்வதற்காக பல லட்சம் ரூபாயில் பேரம் பேசியுள்ளனர்.

3 பேர் கைது

பின்னர், கேரள கும்பல் கேட்டுக்கொண்டபடி மண்ணுளி பாம்பை விற்பனை செய்வதற்காக பருத்திப்பள்ளி பகுதிக்கு காரில் கொண்டு சென்றனர். இந்த நிலையில் கேரள வனத்துறையினரிடம் அவர்கள் சிக்கி கொண்டனர்.

இதையடுத்து 3 பேரையும் வனத்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த மண்ணுளி பாம்பு, கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரும், பறிமுதல் செய்யப்பட்ட கார், மண்ணுளி பாம்பு ஆகியவையும் பருத்திபள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com