

கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூர் அருகே விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது ஏற்பட்ட தகராறு தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதன்காரணமாக பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.
விநாயகர் சிலைகள் ஊர்வலம்
கீழ்பென்னாத்தூர் அருகே கருங்காலிகுப்பம் கிராமத்தில் விவேகானந்தர் காலனி பகுதியில் கடந்த 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடந்தது.
இதனையடுத்து கடந்த 22-ந் தேதி மாலை குன்னங்குப்பம் பகுதியில் உள்ள குளத்தில் விநாயகர் சிலை கரைக்க போலீசார் அனுமதி அளித்திருந்தனர்.
ஆனால் கருங்காலிகுப்பத்தில் உள்ள ஏரியில் விநாயகர் சிலையை கரைப்பதற்காக அப்பகுதி மக்கள் ஊர்வலமாக சென்றனர்.
அப்போது கருங்காலிகுப்பத்தில் வசிக்கும் சிலர் இந்த வழியாக ஊர்வலம் கொண்டு செல்லக்கூடாது என கூறி தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் விரைந்து வந்து இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையடுத்து நள்ளிரவுக்கு பின்னர் அங்குள்ள ஏரியில் விநாயகர் சிலை கரைக்கப்பட்டது.
சாலை மறியல்
இதனையடுத்து நாராயணசாமி என்பவரது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களை சேதப்படுத்தப்படுத்தியது தொடர்பாக கீழ்பென்னாத்தூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் நேற்று நள்ளிரவு கருங்காலிகுப்பம் விவேகானந்தர் காலனியைச் சேர்ந்த 5 பேரை போலீசார் விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து இன்று காலை காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 5 பேரையும் விடுவிக்க வேண்டும் என சாலையில் தடுப்பு கட்டைகளை போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போலீசார் குவிப்பு
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து போலீசார் வரவழைக்கப்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் குவிக்கப்பட்டனர்.
இதனிடையே போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட விவேகானந்தர் காலனியைச் சேர்ந்த 5 பேரில் சூர்யா (வயது 24), லோகநாதன் (40), சரவணன் (44) ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குபதிந்து திருவண்ணாமலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர். மற்ற 2 பேர் விடுவிக்கப்பட்டனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக கருங்காலிகுப்பத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.