‘ரெயில் ஒன்’ செயலி மூலம் பெறும் முன்பதிவு இல்லாத பயணச்சீட்டுகளுக்கு 3 சதவீதம் தள்ளுபடி


‘ரெயில் ஒன்’ செயலி மூலம் பெறும் முன்பதிவு இல்லாத பயணச்சீட்டுகளுக்கு 3 சதவீதம் தள்ளுபடி
x

‘ரெயில் ஒன்' செயலியை ஆண்ட்ராய்டு ப்ளே ஸ்டோர் மற்றும் ஐ.ஓ.எஸ் ஆப் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

சென்னை,

தெற்கு ரெயில்வே பயணிகளின் வசதிக்காகவும், பணமில்லா மற்றும் எளிதான பயணத்தை ஊக்குவிக்கவும், ‘ரெயில் ஒன்' செயலி மூலம் முன்பதிவு இல்லாத (பொது) ரெயில் பயணச்சீட்டுகளை டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி பெறுவோருக்கு 3 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இந்த சலுகை வருகிற 14-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை 6 மாத காலத்திற்கு அமலில் இருக்கும். பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவித்தல் மற்றும் பயணச்சீட்டுக்காக வரிசையில் நிற்பதை தவிர்த்தல் இதன் நோக்கம் ஆகும். ‘ரெயில் ஒன்' செயலி மூலம் யு.பி.ஐ, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் போன்ற எந்தவொரு டிஜிட்டல் கட்டண முறையையும் பயன்படுத்தி முன்பதிவில்லாத பயணச்சீட்டு எடுத்தால் மொத்த கட்டணத்தில் 3 சதவீத தள்ளுபடி கிடைக்கும்.

ஏற்கெனவே இருந்த ‘ஆர்-வாலட்' மூலம் பணம் செலுத்துபவர்களுக்கான 3 சதவீத ‘கேஷ்பேக்’ சலுகையும் இந்திய ரெயில்வேயின் அனைத்து சேவைகளுக்கும் ஒரே தளமாக இந்த ‘ரெயில் ஒன்' செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் முன்பதிவு மற்றும் முன்பதிவில்லா பயணச்சீட்டுகள், நடைமேடை சீட்டுகள் முன்பதிவு செய்தல், ரெயிலின் நேரலை நிலையை அறிதல், ரெயில் பெட்டிகள் மற்றும் நடைமேடை தகவல்கள், உணவு ஆர்டர் செய்தல் மற்றும் குறைகளைத் தீர்த்தல் போன்ற பல சேவைகள் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன.

பயணிகள் ‘ரெயில் ஒன்' செயலியை ஆண்ட்ராய்டு ப்ளே ஸ்டோர் மற்றும் ஐ.ஓ.எஸ் ஆப் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து இந்த சலுகையைப் பெறலாம். தெற்கு ரெயில்வே மண்டலத்தில் தற்போது சுமார் 29.5 சதவீதம் முன்பதிவில்லா பயணச்சீட்டுகள் செல்போன் செயலிகள் மூலமாகவே முன்பதிவு செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story