கோவிலில் உள்ள பெண்கள் குளியல் அறையில் 3 ரகசிய கேமிராக்கள்

தூத்துக்குடி மாவட்டம் அருகே உள்ல கோவிலில் பெண்கள் குளியல் அறையில் 3 ரகசிய கேமிராக்கள் கண்டெடுக்கப்பட்டது.
கோவிலில் உள்ள பெண்கள் குளியல் அறையில் 3 ரகசிய கேமிராக்கள்
Published on

விளாத்திகுளம்:

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சித்தவநாயக்கன்பட்டி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ காமாக்ஷியம்மன் திருக்கோவில் உள்ளது.

கடந்த 17-ம் தேதி பௌர்ணமி தினத்தன்று கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு தரிசனம் செய்து கொள்வதற்காக ஏராளமானோர் இக்கோவிலுக்கு வந்திருந்தனர். அச்சமயத்தில் இக்கோவிலுக்கு வந்த விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் பக்தர் ஒருவர் குளிப்பதற்காக இக்கோவில் வளாகத்தில் உள்ள குளியலறைக்கு சென்றுள்ளார்.

அங்கு சென்ற பெண் குளியலறையில் சம்பந்தமில்லாத கருப்புநிற வயர் இருப்பதைக்கண்டு, இது என்னவென்று எடுத்து பார்த்தபோது அது கேமிரா என தெரியவந்துள்ளது. இதனையடுத்து குளியலறையில் ரகசியக் கேமிரா இருப்பதைக்கண்ட அப்பெண் அதிர்ச்சியடைந்து கோவில் நிர்வாகத்தினரிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். இது வெளியில் தெரிந்தால் கோவிலின் பெயர் கெட்டுவிடும் என்று கூறி விசாரிக்கலாம் என கூறியுள்ளனர் கோவில் நிர்வாகத்தினர்.

கோவிலின் குளியலறையில் இருந்த ரகசிய கேமிரா கண்டெடுப்பு குறித்து தகவல் கிடைத்த விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார், இக்கோவிலுக்கு சென்று அங்குள்ள குளியலறையில் சோதனை செய்ததில் கூடுதலாக 2 ரகசிய கேமராக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டெடுக்கப்பட்டது.

மேலும் கேமராவுடன் சார்ஜர் இருந்தது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கோவில் நிர்வாகத்திடம் விசாரணை செய்ததில் இது பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது எனவும், இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் கோவிலின் பெயர் கெட்டுவிடும் எனவும் காவல்துறையினரிடம் கூறியுள்ளனர். மேலும் இதுவரை கோவில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இக்கோவிலின் குளியலறையில் ரகசியமாக பொருத்தப்பட்டிருந்த கேமராக்களை பார்க்கும் போது இதன் மூலம் பெண்கள் குளிப்பதை பல மாதங்களாக தொடர்ந்து படம் எடுத்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com