கிணற்றில் விழுந்த 3 புள்ளிமான்கள் உயிருடன் மீட்பு

இரை தேடி வந்த ஒரு வயது மதிக்கத்தக்க 3 புள்ளிமான்கள் ஓட்டப்பிடாரம் பகுதியில் 30 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் எதிர்பாராதவிதமாக ஒன்றன்பின் ஒன்றாக தவறி விழுந்துள்ளன.
கிணற்றில் விழுந்த 3 புள்ளிமான்கள் உயிருடன் மீட்பு
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள கோடங்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் கெங்கராஜ். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் சுமார் 30 அடி ஆழமுள்ள கிணறு ஒன்று உள்ளது. நேற்று காலை, அந்த பகுதியில் இரை தேடி வந்த சுமார் ஒரு வயது மதிக்கத்தக்க 3 புள்ளிமான்கள், எதிர்பாராதவிதமாக ஒன்றன்பின் ஒன்றாக அந்த ஆழமான கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளன.

கிணற்றில் இருந்த தண்ணீரில் அந்த மான்கள் வெளியே வர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருப்பதை கண்ட கிணற்றின் உரிமையாளர், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினரால் மான்களை மீட்க முடியாத சூழல் நிலவியதால், ஓட்டப்பிடாரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.

நிலைய அலுவலர் புன்னைவனக்கட்டி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ராஜா, முத்துக்குமார், பெரியசாமி, கொம்பு மகாராஜா மற்றும் சிவகுமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் கயிறு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் உதவியுடன் கிணற்றுக்குள் இறங்கினர். தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த 3 மான்களையும் காயமின்றி லாவகமாக பிடித்து, கயிறு கட்டி மேலே கொண்டு வந்தனர்.

மீட்கப்பட்ட மான்கள் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன. மான்களுக்கு தேவையான முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்ட பின்னர், அவை பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விடப்பட்டன. தீயணைப்பு வீரர்களின் இந்த சமயோசித நடவடிக்கையை அப்பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டினர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com