ரூ.200 கோடி மோசடி வழக்கில் தனியார் நிதி நிறுவன பெண் நிர்வாகிகள் 3 பேர் கைது

சென்னை பெரம்பூரில் ரூ.200 கோடி மோசடி வழக்கில் தனியார் நிதி நிறுவன பெண் நிர்வாகிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரூ.200 கோடி மோசடி வழக்கில் தனியார் நிதி நிறுவன பெண் நிர்வாகிகள் 3 பேர் கைது
Published on

சென்னை பெரம்பூர் பாரதி சாலையில் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக 'தி பரஸ்பர சகாயநிதி பெரம்பூர் லிமிடெட்' என்ற பெயரில் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதில் உறுப்பினராக சேர்ந்து ரூ.2 லட்சம் முதல் சுமார் ரூ.ஒரு கோடி வரை சுமார் ரூ.200 கோடி வரையில் வைப்புத் தொகையாகவும் மற்றும் சிறுசேமிப்பு திட்டத்திலும் சேர்ந்து பணம் கட்டினர்.

ஆனால் அவர்களுக்கு வைப்பு தொகைக்கான வட்டியை சரிவர தராமல் இருந்ததுடன், கட்டிய பணத்தையும் திரும்ப தராமல் ஏமாற்றி விட்டனர். இந்த மோசடியால் பாதிக்கப்பட்ட சுமார் 400 பேர் அளித்த புகாரின்பேரில் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த நிறுவனத்துக்கு சொந்தமான புரசைவாக்கம், சூளைமேடு, பெரம்பூர் ஆகிய இடங்களில் உள்ள கட்டிடங்களில் நேற்று முன்தினம் முழுக்க சோதனை செய்தனர். அப்போது முக்கிய ஆவணங்கள், கணினிகள், 120 கிராம் தங்கம், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த நிறுவனத்துக்கு 'சீல்' வைத்தனர்.

இந்தநிலையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் நிதி நிறுவன நிர்வாகியான ஈஸ்வரப்பனின் மனைவி வசந்தி, அவருடைய உறவினரான கண்ணன் என்பவருடைய மனைவி ராஜம் மற்றும் ஈஸ்வரப்பனின் மகள் சக்தி ஐஸ்வர்யா ஆகிய 3 பேரை மோசடி வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களும் அந்த நிதி நிறுவனத்தில் நிர்வாகிகளாக இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com