ஓசூரில் விஷ வாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு: முழு விசாரணை நடத்தப்படும் - அமைச்சர் கீர்த்தனா

கழிவுநீரில் இருந்து துர்நாற்றம் வெளியில் வராமல் இருக்க ரசாயன பொருள் பயன்படுத்தப்படுகிறது.
Hosur
Published on: 

சென்னை,

இத்தகைய துயரச் சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர் கீர்த்தனா கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே வன்னியபுரத்தில் தனியாருக்கு சொந்தமான செல்போன் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 18 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த தொழிற்சாலையில் தர்மபுரி மாவட்டம் பெல்ராம்பட்டியை சேர்ந்த சாரதிகுமார் (வயது 25), பஞ்சப்பள்ளி தின் னூரை சேர்ந்த அக்மல் பாபுபாய் (28), அனுமந்தபுரம் அருகே ஜம்பூத் பகுதியை சேர்ந்த காவேரி (32) ஆகியோர் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வந்தனர்.

3 பேர் பலி

இந்த தொழிற்சாலையில் 2 மாதங்களுக்கு ஒருமுறை கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வது வழக்கம். நேற்று மாலை இவர்கள் 3 பேரும் தொழிற்சாலையில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் திடீரென மயங்கி தொட்டிக்குள் விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. அவர்களை சக தொழிலாளர் கள் மீட்டு, ஒசூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழுவினர். அவர்கள் 3 பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ராயக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

போலீசார் விசாரணை

மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அனிதா, தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தராஜ். இன்ஸ்பெக்டர் ரஜினி ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் 3 தொழிலாளர்களும் விஷவாயு தாக்கி இறந்து இருப்பது தெரியவந்து உள்ளது.

இங்கு கழிவுநீரில் இருந்து துர்நாற்றம் வெளியில் வராமல் இருக்க ரசாயன பொருள் பயன்படுத்தப்படுகிறது. இதுவே விஷவாயுவாக மாறி இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்தநிலையில், இத்தகைய துயரச் சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர் கீர்த்தனா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலையில் ஏற்பட்ட துயரமான சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களின் அன்புக்குரியவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினர் இந்தத் துயரத்திலிருந்து மீண்டு வர இறைவன் மனவலிமையையும், தைரியத்தையும் வழங்க வேண்டுகிறேன்.

முழுமையான விசாரணை நடத்தப்படும்

இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தினரிடம் தொலைபேசியில் பேசி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக வழங்க வேண்டும் என்றும்,

தொழிலாளர்களின் பாதுகாப்பும், கண்ணியமும் எப்போதும் முதன்மையானதாக இருக்க வேண்டும். இந்தத் துயரச் சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் உறுதி செய்யப்பட வேண்டும்.

தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பில் எவ்வித சமரசத்திற்கும் இடமளிக்கக் கூடாது என்பதே அனைவரின் முதன்மையான பொறுப்பாகும் என அதில் பதிவிட்டுள்ளார்.

X