சென்னையில் கொரோனா விழிப்புணர்வுக்காக 30 எல்.இ.டி. வீடியோ வாகன சேவை - எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

கொரோனா விழிப்புணர்வுக்காக 15 மண்டலங்களில் 30 அதிநவீன எல்.இ.டி. வீடியோ வாகன சேவையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
சென்னையில் கொரோனா விழிப்புணர்வுக்காக 30 எல்.இ.டி. வீடியோ வாகன சேவை - எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்
Published on

சென்னை,

சென்னை மாநகராட்சியில் கொரோனா விழிப்புணர்வுக்காக 15 மண்டலங்களில் 30 அதிநவீன எல்.இ.டி. வீடியோ வாகன சேவையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நாட்டிலேயே அதிக கொரோனா பரிசோதனைகள் மேற்கொண்ட பெருநகரங்களில், சென்னை மாநகராட்சி முதலிடம் வகிக்கிறது. சென்னையில் மட்டும் நாள்தோறும் 12 ஆயிரம் முதல் 14 ஆயிரம் வரை பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சென்னை மாநகராட்சியின் சார்பில், கொரோனா தொற்று குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 15 மண்டலங்களுக்கு, மொத்தம் 30 சிறிய அதிநவீன எல்.இ.டி. வீடியோ வாகனங்களின் சேவைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

இவ்வாகனங்களில், கொரோனா தொற்று குறித்த முதல்-அமைச்சரின் விழிப்புணர்வு உரை, சுகாதாரத் துறை மற்றும் சென்னை மாநகராட்சியின் கொரோனா விழிப்புணர்வு குறும்படங்கள் போன்றவை ஒளிபரப்பப்படும்.

சென்னை மாநகராட்சியின் சார்பில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்தவும், கொரோனா தொற்று பரிசோதனைகளை அதிகரிக்கவும், கொரோனா தொற்று அறிகுறிகளான காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்றவை குறித்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 12 ஆயிரம் களப்பணியாளர்கள் மூலம் 10 லட்சம் வீடுகளில் வழங்கவுள்ள 10 லட்சம் கொரோனா தொற்று விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள், பருவமழை தொடங்கியுள்ள நிலையில் 10 லட்சம் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் பொழிகின்ற மழைநீரை வீணாக்காமல் சேகரிக்க பயன்படும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளின் அவசியம் குறித்த 10 லட்சம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் ஆகியவற்றை வழங்கும் பணிகளை முதல்-அமைச்சர், களப் பணியாளர்களுக்கு வழங்கி தொடக்கிவைத்தார்.

சென்னை மாநகராட்சி பகுதியில் தொற்றால் பாதிக்கப்பட்டு, குணமடைந்து வீடு திரும்பிய ஒரு லட்சம் பேருக்கு முதல்-அமைச்சர் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் கைப்பேசி எண்கள் மூலமாக தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சியில் 37 இடங்களில் உள்ள மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளுக்கு மாறும் வண்ண மின்விளக்குகள் அமைக்கும் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக நேப்பியர் பாலம் மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை மேம்பாலம் ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள மாறும் வண்ண விளக்குகளை முதல்-அமைச்சர் தொடக்கிவைத்தார்.

தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டுக் கழகத்தின் 2019-2020-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் இடைக்கால ஈவுத் தொகையான 7 கோடியே 44 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கினார்.

மேலும், நிலஅளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குனரகத்தில் காலியாக உள்ள 505 நில அளவர் மற்றும் 20 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 4 நில அளவர் மற்றும் 1 இளநிலை உதவியாளர் ஆகியோருக்கு முதல்-அமைச்சர் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com