பறிமுதல் செய்த 300 மதுபாட்டில்கள் காவல் நிலையத்தில் மாயம்.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி

மதுபாட்டில்களை கோர்ட்டு உத்தரவு பெற்று போலீசார் அழிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

தஞ்சை,

தஞ்சையை அடுத்த வல்லம் போலீஸ் நிலைய பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு பெட்டிக்கடைகள், பார்கள் மற்றும் கள்ளச்சந்தையில் விற்பனை செய்த ஏராளமான மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை வல்லம் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பாக வைத்திருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கில் உள்ள மதுபாட்டில்களை கோர்ட்டு உத்தரவு பெற்று போலீசார் அழிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பாக வைத்திருந்த மதுபாட்டில்களில் 300 மது பாட்டில்கள் மாயமானது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இதுகுறித்து விசாரணை நடத்துமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு பிறப்பித்தார். அவரது உத்தரவின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், வல்லம் போலீஸ் நிலையத்தில் எழுத்தராக பணிபுரிந்து வந்த ஜெயகுரு (45) என்பவர் 300 மதுபாட்டில்களையும் யாருக்கும் தெரியாமல் எடுத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து காவல் நிலைய எழுத்தர் ஜெயகுரு கடந்த 7-ந் தேதி ஆயுதப்பட்டைக்கு மாற்றப்பட்டார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அவரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவிட்டுள்ளார். காவல் நிலையத்தில் இருந்த மதுப்பாட்டில்களை காவல் நிலைய எழுத்தரே விற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com