அகதிகள் சிறப்பு முகாமில் 300 போலீசார் அதிரடி சோதனை

திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள அகதிகள் சிறப்பு முகாமில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் 60 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அகதிகள் சிறப்பு முகாமில் 300 போலீசார் அதிரடி சோதனை
Published on

திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள அகதிகள் சிறப்பு முகாமில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் 60 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அகதிகளுக்கான சிறப்பு முகாம்

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அகதிகளுக்கான சிறப்பு முகாம் உள்ளது. இங்கு வெளிநாடுகளை சேர்ந்த குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும் வழக்கு முடிவதற்கு முன்பாக வெளிநாட்டுக்கு தப்பி செல்லாமல் இருப்பதற்காக இந்த சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை இந்த முகாமில் இலங்கை, வங்காளதேசம், நைஜீரியா, ருவாண்டா, பல்கேரியா, தெற்கு சூடான் உள்பட பல நாடுகளை சேர்ந்த 156 பேர் உள்ளனர். இவர்கள் தங்கள் மீதான வழக்குகளை விரைந்து முடித்து சிறப்பு முகாமில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவ்வப்போது போராட்டமும் நடத்தி வருவது உண்டு.

பேலீசார் அதிரடி சோதனை

கடந்த மாதம் 20-ந் தேதி திருச்சி சிறப்பு முகாமில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினார்கள். கேரளாவில் போதைப்பொருள் சிக்கிய வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. அப்போது முகாமில் இருந்து தங்க நகைகள், பணம், செல்போன்கள், கண்காணிப்பு கேமரா பதிவுகள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து அமலாக்கத்துறையினரும் சிறப்பு முகாமில் சோதனை நடத்தினர்.

இந்தநிலையில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில், போலீஸ் துணை கமிஷனர்கள் சுரேஷ்குமார், ஸ்ரீதேவி, அன்பு ஆகியோர் தலைமையில் பேலீஸ் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய 300-க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று அதிகாலை 4 மணி முதல் சிறப்பு முகாமிற்குள் நுழைந்து அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் ஒவ்வொரு அறையாக சென்று நடத்தப்பட்ட சோதனையில் 60 செல்போன்கள், ஒரு டேப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. நேற்று அதிகாலை தொடங்கிய சோதனை பகல் 12 மணி வரை நடைபெற்றது.

மரத்தில் ஏறி தற்கெலை மிரட்டல்

போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையை கண்டித்தும், தங்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை திரும்ப ஒப்படைக்கக்கோரியும், முகாமில் உள்ளவர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது இலங்கையை சேர்ந்த 4 பேர் திடீரென மரத்தில் ஏறி கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டல் விடுத்தனர்.

உடனே வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு வந்து போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் இதில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து, மரத்தில் ஏறி நின்றபடி கூச்சலிட்டனர். இதனால் சிறப்பு முகாம் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com