

மதுரை,
மதுரை வனக்கோட்டம் சார்பில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்து வந்தது. இந்த பணிகள் 2 கட்டங்களாக நடந்தன. அதன்படி, கடந்த டிசம்பர் மாதம் 27 மற்றும் 28-ந்தேதி ஈர நிலங்களில் ஒரு கணக்கெடுப்பும், சாதாரண வன நிலப்பரப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 13 மற்றும் 14-ந்தேதிகளிலும் கணக்கெடுப்பு நடந்தது. இதில் டிசம்பர் மாதம் நடந்த கணக்கெடுப்பின் போது, 25 பகுதிகளில் பறவை இனங்கள் கண்காணிக்கப்பட்டு, 133 பறவை இனங்கள் கண்டறியப்பட்டன.
அதாவது சுமார் 13,142 பறவைகள் கணக்கெடுக்கப்பட்டன. இது தவிர 47 வகையான தண்ணீர் பறவை இனங்கள் கண்டறியப்பட்டன. இதில் சுமார் 8,630 பறவைகள் கணக்கெடுக்கப்பட்டன. வேறு பகுதிகளில் இருந்து மதுரை மாவட்டத்திற்கு வந்திருந்த 12 தண்ணீர் பறவை இனங்கள் கண்டறியப்பட்டு சுமார் 1,217 பறவைகள் கணக்கெடுக்கப்பட்டன.
இதற்கிடையே, கடந்த பிப்ரவரி மாதம் நடந்த கணக்கெடுப்பின் போது 25 பகுதிகளில் கண்காணிக்கப்பட்டு 135 பறவை இனங்கள் கண்டறியப்பட்டன. இதில் 5,134 பறவைகள் இருப்பது தெரியவந்தது. பிற பகுதிகளில் இருந்து மாவட்டத்திற்கு வந்திருந்த வெளிநாட்டு மற்றும் வெளிமாநில பறவை இனங்கள் 20 கண்டறியப்பட்டு 496 பறவைகள் இருந்தன.
அரிய வகை பறவை இனங்கள் 101 கண்டறியப்பட்டு 4,371 பறவைகள் இருப்பது தெரிய வந்தன. இந்த கணக்கெடுப்பு கடந்த 2025-26-ம் ஆண்டுக்கானது என்று வனத்துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்டத்தில் ஈரநிலப்பகுதி மற்றும் சாதாரண நிலப்பரப்பில் ஆண்டுக்கு சராசரியாக சுமார் 30 ஆயிரம் பறவைகள் வசிக்கின்றன. இது தவிர வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து சுமார் 1,600 பறவைகள் வந்து செல்கின்றன.