பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 300-வது நாளாக போராட்டம்

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 300-வது நாளாக போராட்டம் நடந்தது. அப்போது கிராம மக்கள் ஏரியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 300-வது நாளாக போராட்டம்
Published on

வாலாஜாபாத்,

காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள வளத்தூர், நெல்வாய், தண்டலம், மேல்படவூர், நாகப்பட்டு, ஏகனாபுரம், எடையார்பாக்கம், அக்கம்மாபுரம், குணகரம்பாக்கம், சிங்கிலி பாடி, மகாதேவி மங்கலம் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி பசுமைவெளி விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

இநத நிலையில் பசுமை வெளி விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ந்தேதி முதல் ஏகனாபுரம், பரந்தூர், தண்டலம், நெல்வாய், மேலேறி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

குடியிருப்புகளையும் வாழ்வாதாரங்களையும் இழக்கும் கிராம மக்கள் கிராம சபை கூட்டங்களில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானங்களை நிறைவேற்றி வருகின்றனர்.

இந்தநிலையில் அக்டோபர் மாதம்- காந்தி ஜெயந்தி, நவம்பர் மாதம்- உள்ளாட்சிகள் தினம், ஜனவரி மாதம்- குடியரசு தினம், ஆகஸ்டு மாதம் சுதந்திர தினம், மார்ச் மாதம்- உலக தண்ணீர் தினம், மே மாதம்- உழைப்பாளர் தினம் என ஏகனாபுரம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் 6 முறை பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

ஏரியில் இறங்கி ஆர்ப்பாட்டம்

கடந்த வாரம் நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்திலும் கோரிக்கை மனுக்களை அளித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து இருந்தனர். இந்த நிலையில் போராட்டத்தின் 300-வது நாளையொட்டி

ஏரி, குளம், குட்டை, கால்வாய், உள்ளிட்ட நீர்நிலைகளையும், நீர் ஆதாரங்களையும், அழிக்கும் செயலுக்கு கண்டனம் தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று ஏகனாபுரம் வயலேரி ஏரியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விளைநிலங்களையும் குடியிருப்புகளையும், ஏரிகள் குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை அழித்து பரந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயத்தையும் விவசாயிகளை பாதிக்கும் வகையில் பரந்தூர் விமான நிலையம் அமைக்க கூடாது என்று கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிராம மக்கள் ஏரியில் இறங்கி நடத்தும் போராட்டத்தையொட்டி அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்க காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசாரும், காஞ்சீபுரம் தீயணைப்பு துறை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com