வாலாஜா
வாலாஜாவில் நடந்த புத்தக கண்காட்சியில் ரூ.31 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலகத்துறை சார்பாக முதலாவது மாபெரும் புத்தகக் கண்காட்சி கடந்த 14-ந்தேதியில் இருந்து நேற்று வரை நடந்தது. நிறைவு நாளான நேற்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பங்கேற்று புத்தகம் வாசித்தலின் முக்கியத்துவம் குறித்து மாணவ-மாணவிகள், பொதுமக்களிடம் எடுத்துரைத்தார். விழாவில் நடந்த கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், பட்டிமன்றங்கள் போன்றவற்றில் பங்கேற்று கண்டு களித்தார்.
புத்தகக் கண்காட்சியில் 40 புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. 13 அரசு துறைகள் பல்துறை பணி விளக்க கண்காட்சியும், 6 உணவு விற்பனை அரங்குகளும் அமைக்கப்பட்டு இருந்தன. கண்காட்சியில் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவரவர்களுக்கு தேவையான புத்தகங்களும், மிகப் பெரிய எழுத்தாளர்கள் எழுதிய பல்வேறு வகையான புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன.
தினமும் புத்தகக் கண்காட்சியில் மாலை நேரத்தில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், 6 பரத நாட்டிய குழுவினரின் கலை நிகழ்ச்சிகள், மாணவ-மாணவிகள் மற்றும் பேச்சாளர்களின் 7 பட்டிமன்றங்கள், கவியரங்கங்கள் நடந்தன. பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் எழுதிய எழுத்தாளர்களின் 10 புத்தகங்கள் மாவட்ட கலெக்டரால் தினமும் நடந்த நிகழ்ச்சிகளில் வெளியிடப்பட்டன.
புத்தகக் கண்காட்சி நிறைவு நாள் விழாவில் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் என மொத்தம் 91 ஆயிரம் பேர் பங்கேற்றனர். 14-ந்தேதியில் இருந்து நேற்று வரை மொத்தம் ரூ.31 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.குமரேஸ்வரன், கல்லூரி முதல்வர் பூங்குழலி, துணை கலெக்டர் கவிதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ் , தாசில்தார்கள் ஆனந்தன், விஜயகுமார் (குற்றவியல்) உள்பட பலர் கலந்து கொண்டனர்.