

திருநெல்வேலி,
திருநெல்வேலி மாவட்ட போலீசாரின் தீவிர நடவடிக்கையால் நேற்று ஒரே நாளில் சுமார் 314 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில், ஏர்வாடியில் இருந்து நாங்குநேரி செல்லும் ரோட்டில் உள்ள விளையாட்டு மைதானம் அருகே சோதனை செய்தனர்.
அந்த சோதனையில் வள்ளியூரை சேர்ந்த கண்ணன் (வயது 53) மற்றும் மறுகால்குறிச்சியை சேர்ந்த ஐயப்பன்(40) ஆகிய 2 பேரும் சேர்ந்து சுமார் 314 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
இதுகுறித்து ஏர்வாடி பொறுப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரையும் கைது செய்து, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கைப்பற்றி உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.