மேட்டூர் அணையில் இருந்து 32 அடி தண்ணீர் வீணடிக்கப்பட்டுள்ளது; பி.ஆர். பாண்டியன் பேட்டி

நீர்ப்பாசன துறையின் அனுபவமின்மையால் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட 32 அடி தண்ணீர் வீணடிக்கப்பட்டுள்ளது என பி.ஆர். பாண்டியன் கூறியுள்ளார்
பி.ஆர். பாண்டியன்
Published on: 

நாகப்பட்டினம்,

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பிஆர் பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது: காவிரி டெல்டா மாவட்டங்களில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. சூப்பர் எல்நினோ தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் இதுவரையிலும் விளைநிலப் பகுதிகளுக்கோ, கிராமங்களுக்கு சென்றடையவில்லை. அனுபவம் இல்லாத உயர் அதிகாரிகளால் நீர் நிர்வாக முறைகளில் வெளிப்படுத்த தன்மையில்லை.

காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர்ப்பாசன துறை முன்னுரிமை கொடுக்கவில்லை. நீர்ப்பாசனத் துறையின் அனுபவமின்மையால் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட 32 அடி தண்ணீர் வீணடிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு போக சம்பா சாகுபடியும் மிகப்பெரிய கேள்விக்குறியாகி உள்ளது. விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பிற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்.

கர்நாடக அரசு தண்ணீர் இல்லை என்று சொல்வதைக் கேட்டு தமிழகத்திற்கு தண்ணீரை விடுவிக்க உச்ச நீதிமன்றம் எப்படி உத்தரவிட முடியும் என்கிற கேள்வியை நீதி அரசர்கள் எழுப்பியுள்ளது சட்டத்திற்கு விரோதமாக விவசாயிகள் கருதுகின்றனர். கர்நாடகாவில் உள்ள அணைகளின் நீர் இருப்பை கணக்கில் கொண்டு தண்ணீரை திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிடுகிறது.

அதை ஏற்க கர்நாடகம் மறுக்கும் பட்சத்தில் உச்ச நீதிமன்றம் உடனடியாக தண்ணீரை திறக்க உத்தரவிட வேண்டுமே தவிர, கர்நாடகாவின் கருத்தை கேட்டு தமிழகத்தின் பாதிப்புகளை மூடி மறைக்க உச்சநீதிமன்ற துணை போய் விடக்கூடாது. கர்நாடகம் தமிழகத்தில் உள்ள அணைகளின் நீர் நிர்வாகம் முழுமையும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்பதை நீதிமன்றத்திற்கு எடுத்துரைக்க வேண்டும்” என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com