

கரூர்,
கரூர் தாந்தோணிமலை காவல் நிலையம் எதிரே உள்ள ஆசிரியர் வீட்டின் கதவை உடைத்து, 32 சவரன் தங்க நகைகள் மற்றும் 400 அமெரிக்க டாலர்களைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கரூர் - திருச்சி சாலையில் உள்ள காவேரி நகர் பகுதியில் வசித்து வருபவர் தர்மராஜன். இவர், குளத்துப்பாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 19-ந்தேதி தர்மராஜன் தனது குடும்பத்தினருடன் உறவினரைச் சந்திப்பதற்காக பெங்களூரு சென்றுள்ளார், இதனால் வீடு பூட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று அதிகாலை சுமார் 4 மணிக்கு தர்மராஜன் குடும்பத்தினருடன் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 32 சவரன் தங்க நகைகள் மற்றும் 400 அமெரிக்க டாலர்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தர்மராஜன், வீட்டிற்கு எதிரே உள்ள தாந்தோணிமலை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், வீட்டில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், கொள்ளையர்கள் வீட்டிற்குள் நுழைந்த விதம், அவர்கள் தப்பிச் சென்ற வழி உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு, அங்கு பதிவாகியுள்ள தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. காவல் நிலையம் எதிரே உள்ள ஆசிரியர் வீட்டிலேயே நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.