கல்லூரிகளில் 328 தற்காலிக உதவிப் பேராசிரியர்கள் பணி நீக்கம் - டிடிவி தினகரன் கண்டனம்

மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் திமுக அரசின் செயல்பாடு கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
கல்லூரிகளில் 328 தற்காலிக உதவிப் பேராசிரியர்கள் பணி நீக்கம் - டிடிவி தினகரன் கண்டனம்
Published on

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் செயல்படும் பல்வேறு உறுப்புக் கல்லூரிகளில் தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக பணியாற்றிவந்த 328 உதவிப் பேராசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பணிநீட்டிப்பு செய்யப்பட்டு கடந்த 17 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பல்வேறு கல்லூரிகளில் பணியாற்றி வந்த உதவிப் பேராசிரியர்கள்,கடந்த டிசம்பர் 31 ஆம் தேதிக்கு பின்னர் பணி நீட்டிப்பு செய்யப்படாததால், மாத ஊதியம் கூட கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக வழங்கிய தேர்தல் அறிக்கையில் 153வதாக இடம்பெற்றிருந்த அரசுத்துறை நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த மற்றும் தற்காலிக பணி அடிப்படையில் பணிபுரிவோர் அனைவரையும் பணிநிரந்தரம் செய்ய பரிசீலிக்கப்படும் என்ற வாக்குறுதியை, இதுவரை நிறைவேற்றாத திமுக, தற்போது அதற்கு நேர்மாறாக தற்காலிக பணியாளர்களை நிரந்தரமாக வீட்டிற்கு அனுப்ப முயற்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது.

எனவே, பணிநீக்கம் செய்யப்பட்ட 328 உதவிப் பேராசிரியர்களையும், உடனடியாக பணிநிரந்தரம் செய்திடுவதோடு, தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் காலியாக இருக்கும் உதவிப் பேராசிரியர்களின் பணியிடங்களையும் நிரப்பிட வேண்டும் என உயர்கல்வித்துறையையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com