

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததாக 5 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 3.300 கிலோ கிராம் கஞ்சா மற்றும் 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் தலைமையிலான போலீசார், முள்ளக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முள்ளக்காடு அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த 5 இளைஞர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி (27), நந்தகுமார் (23), விஜயராகவன் (27), பாலகிருஷ்ணன் (25), ராம்குமார் (25) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3.300 கிலோ கிராம் கஞ்சாவை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். மேலும், சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 5 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்ந்து 5 பேரையும் கைது செய்த போலீசார் நடத்திய விசாரணையில், மதுரையில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து, தூத்துக்குடி புறநகர் பகுதிகளான முத்தையாபுரம், முள்ளக்காடு மற்றும் அத்திமரப்பட்டி உள்ளிட்ட இடங்களில் கல்லூரி மாணவர்கள் மற்றும் உள்ளூர் நபர்களுக்கு சில்லறை விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.
மேலும், மதுரையில் இவர்களுக்கு கஞ்சா வழங்கியவர்கள் யார், இந்த கடத்தல் வலையமைப்பின் பின்னணியில் உள்ள முக்கிய நபர்கள் யார் என்பது குறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.