

சென்னை,
கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் 33 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
காஞ்சீபுரம் தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் 83 டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 மற்றும் 4-ந் தேதிகளில் டாஸ்மாக் கடைகளை அடைத்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் பணியாளர்கள் தொழிற்சங்கத்தினருடன் டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து டாஸ்மாக் கடைகளை பணியாளர்கள் படிப்படியாக திறந்து மது விற்பனையை தொடங்கினார்கள்.
இந்த நிலையில் டாஸ்மாக் நிர்வாகத்தின் பேச்சுவார்த்தைக்கும் உடன்படாமல் 33 டாஸ்மாக் கடைகளில் மேற்பார்வையாளர்கள் கடைகளை திறக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.
டாஸ்மாக் நிர்வாகத்தின் உத்தரவை தொடர்ந்து பிற பணியாளர்கள் கடைகளை திறந்தனர். டாஸ்மாக் கடைகளை திறக்காத 33 மேற்பார்வையாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இது குறித்து உரிய பதில் வராததால் காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட டாஸ்மாக் நிர்வாக மண்டல மேலாளர், 33 டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட 33 மேற்பார்வையாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் மற்ற டாஸ்மாக் ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.