திருநெல்வேலி,
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக மேற்கொள்ளப்பட்ட போதைப் பொருள் எதிர்ப்பு நடவடிக்கையின் விளைவாக 34 கிராமங்கள் போதையில்லா கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு மாத கால போதைப் பொருள் எதிர்ப்பு நடவடிக்கையின் விளைவு குறித்து மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக மேற்கொள்ளப்பட்ட Anti-Drug Drive (போதைப் பொருள் எதிர்ப்பு) நடவடிக்கையின் விளைவாக 34 கிராமங்கள் போதையில்லா கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் கடந்த ஒரு மாதத்தில் 23 கிலோ 715 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 111 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 133 கிலோ 904 கிராம் கஞ்சா அழிக்கப்பட்டுள்ளது. மேலும் 92 கிலோ 140 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 31 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 112 கிலோ 843 கிராம் புகையிலைப் பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளது.
மேலும் 11.8.2026 அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 204 பள்ளிகள் மற்றும் 15 கல்லூரிகள் என மொத்தம் 219 கல்வி நிறுவனங்களில் மாணவ, மாணவியர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எஸ்.பி., டி.எஸ்.பி.க்கள் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் விழிப்புணர்வு பேரணி, மாரத்தான் போட்டி, உறுதிமொழி ஏற்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.