வாக்காளர் பட்டியலில் இருந்து 34,982 பேர் பெயர் நீக்கம்

தேனி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து 34 ஆயிரத்து 982 பேரின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் முரளிதரன் தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியலில் இருந்து 34,982 பேர் பெயர் நீக்கம்
Published on

வரைவு வாக்காளர் பட்டியல்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று வெளியிடப்பட்டது. பட்டியலை மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டு பேசியதாவது:-

தேனி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த ஜனவரி 5-ந்தேதி வெளியிடப்பட்டது. அதன்படி தேனி மாவட்டத்தில் 5 லட்சத்து 55 ஆயிரத்து 945 ஆண் வாக்காளர்கள், 5 லட்சத்து 79 ஆயிரத்து 293 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 208 பேர் என மொத்தம் 11 லட்சத்து 35 ஆயிரத்து 446 பேர் அந்த பட்டியலில் இடம் பெற்றிருந்தனர்.

அதன்பிறகு 1.1.2023-ந்தேதியை தகுதி நாளாக கொண்டு ஜனவரி 5-ந்தேதி முதல் அக்டோபர் 10-ந்தேதி வரை தொடர் திருத்தப் பணிகள் நடந்தன. இதில் நேரடியாகவும், இணையதளம் மூலமாகவும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டன.

34,982 பேர் நீக்கம்

அதன்படி மாவட்டத்தில் பெயர் சேர்க்க 6,877 மனுக்கள், நீக்கம் செய்ய 35,638 மனுக்கள், திருத்தம் செய்ய 4,687 மனுக்கள், முகவரி மாற்ற 251 மனுக்கள் என மொத்தம் 47 ஆயிரத்து 453 மனுக்கள் பெறப்பட்டன. அதன்படி வாக்காளர் பட்டியலில் புதிதாக 5,771 பேர் சேர்க்கப்பட்டனர். இறப்பு, வேறு தொகுதிக்கு இடம் பெயர்தல், இரட்டை வாக்காளர்கள் போன்ற காரணங்களுக்காக 34,982 பேரின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. 3,700 வாக்காளர்களின் பட்டியலில் திருத்தம் செய்யப்பட்டன. 229 பேரின் முகவரி மாற்றப்பட்டன. மொத்தம் பெறப்பட்ட மனுக்களில் 44 ஆயிரத்து 682 மனுக்கள் தீர்வு காணப்பட்டன. இதர 2,771 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

11 லட்சம் வாக்காளர்கள்

ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது மாவட்டத்தில் மொத்தம் 11 லட்சத்து 6 ஆயிரத்து 235 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண்கள் 5 லட்சத்து 41 ஆயிரத்து 411 பேர், பெண்கள் 5 லட்சத்து 63 ஆயிரத்து 631 பேர், 193 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் ஆவார்கள்.

இந்த ஒருங்கிணைந்த வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள், நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். மக்கள் இதனை சரிபார்க்கலாம். மேலும் 18 வயது பூர்த்தியடைந்த நபர்கள் தங்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க மனு கொடுக்கலாம். இதற்கான சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் அடுத்த மாதம் (டிசம்பர்) 8-ந்தேதி வரை நடக்கிறது. மேலும் இந்த பணிக்காக சிறப்பு முகாம்கள் நாளை மறுநாள் (சனிக்கிழமை), 13-ந்தேதி, 26-ந்தேதி, 27-ந்தேதி ஆகிய நாட்களிலும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடக்கிறது. இதில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம், ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் தொடர்பான மனுக்களை கொடுக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடந்தது. இதில் மாணவர்கள் கர்னல் ஜான் பென்னிகுயிக் பஸ் நிலையம் வரை சைக்கிளில் ஊர்வலமாக சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com