தகவல் அறியும் உரிமை சட்டத்தில் ஆண்டுக்கு 3½ லட்சம் மனுக்கள் பெறப்படுகின்றன: மாநில தகவல் ஆணையர்

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் ஆண்டுக்கு 3½ லட்சம் மனுக்கள் பெறப்படுகின்றன என்று மாநில தகவல் ஆணையர் பிரதாப் குமார் தெரிவித்தார்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் ஆண்டுக்கு 3½ லட்சம் மனுக்கள் பெறப்படுகின்றன: மாநில தகவல் ஆணையர்
Published on

மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணை

தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் 2-வது மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாநில தகவல் ஆணையர் பிரதாப் குமார் விசாரணை நடத்தினார்.மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா முன்னிலை வகித்தார். இதில் 50 மனுக்கள் மீதான விசாரணை நடத்தப்பட்டது.

பின்னர் மாநில தகவல் ஆணையர் பிரதாப் குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

நிலுவை

தமிழ்நாடு தகவல் ஆணையம் சார்பில், தலைமை ஆணையர் உள்பட அனைத்து தகவல் ஆணையர்களும் பல்வேறு மாவட்டங்களில் விசாரணை நடத்தி வருகிறோம். மனுதாரர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னை வருவதற்கு சிரமமாக இருப்பதால், மனுதாரர்கள், பொது தகவல் அலுவலர்கள் வசதிக்கு ஏற்ப கடந்த 3 ஆண்டுகளாக மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தி, முடிவு செய்து வருகிறோம். இதனால் உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக உள்ளது.

தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நிலுவையில் உள்ள 2-வது மேல் முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் குறைவான மனுக்கள்தான் நிலுவையில் உள்ளன. தமிழகம் முழுவதும் சுமார் 9 ஆயிரம் மனுக்கள் நிலுவையில் உள்ளன.

3 லட்சம் மனுக்கள்

தற்போது பொதுமக்கள் அதிகளவில் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு அனுப்பி வருகின்றனர். ஆண்டுக்கு 3 லட்சம் மனுக்கள் பெறப்படுகின்றன. இதனை உரிய ஆய்வு மேற்கொண்டு, சுமார் 3 லட்சம் முதல் 3 லட்சத்து 10 ஆயிரம் மனுக்கள் வரை விசாரணைக்கு எடுக்கப்படுகிறது. காழ்ப்புணர்ச்சியுடன் மனுக்கள் அனுப்பினால், அதனை கண்டறிந்து மேல்விசாரணைக்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு, அதன்பிறகு தீர்வு காணப்படும்.

2-வது மேல்முறையீட்டு மனுவுக்கும் உரிய தகவல் அளிக்காத பொதுத்தகவல் அலுவலர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. அதன்படி நெல்லை, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 2 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் மாநில தகவல் ஆணையத்துக்கு இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com