சென்னை பேருந்து நிழற்குடைகளில் 35 டன் குப்பைகள் அகற்றம்

பேருந்து நிழற்குடைகளில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட அனுமதியின்றி ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளும் அகற்றப்பட்டன.
 குப்பைகள் அகற்றம்
Published on: 

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்து பேருந்து நிறுத்த நிழற்குடைகளிலும் இன்று மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிரத் தூய்மைப் பணிகளில், 35 மெட்ரிக் டன் கழிவுகள் மற்றும் 3,000-க்கும் மேற்பட்ட அனுமதியின்றி ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.

இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

சிறப்பு தீவிரத் தூய்மைப் பணி

பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளரின் அறிவுறுத்தலின்படி, பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகளுக்கு தூய்மையான, பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான சூழலை உறுதி செய்யும் வகையில், இன்று (28.11.2026) பெருநகர சென்னை மாநகராட்சியின் 1 முதல் 15 வரையிலான அனைத்து மண்டலங்களிலும் உள்ள பேருந்து நிழற்குடைகளில் சிறப்பு தீவிரத் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டது.

35 டன் கழிவுகள் அகற்றம்

இச்சிறப்பு தீவிரத் தூய்மைப் பணியின் மூலம், சுமார் 18 மெட்ரிக் டன் குப்பைகள், 17 மெட்ரிக் டன் கட்டிட மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் என மொத்தம் 35 மெட்ரிக் டன் கழிவுகள் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டன. மேலும், பேருந்து நிழற்குடைகளில் ஒட்டப்பட்டிருந்த சுமார் 3,000-க்கும் மேற்பட்ட அனுமதியின்றி ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் அகற்றப்பட்டன. பேருந்து நிழற்குடைகளில் உள்ள பயணிகள் அமரும் இருக்கைகள் மற்றும் அனுமதியுடன் வைக்கப்பட்டிருந்த பதாகைகளும் தண்ணீரைப் பயன்படுத்தி முழுமையாகச் சுத்தம் செய்யப்பட்டன.

தேவையான நடவடிக்கை

இந்தப் பணியின் போது, பேருந்து நிழற்குடைகளில் உள்ள பழுதுகள் மற்றும் சேதமடைந்த பகுதிகள் கண்டறியப்பட்டு, அவற்றின் விவரங்கள் மற்றும் தேவையான அளவீடுகள் முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றை உடனடியாகச் சீரமைக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

பெருநகர சென்னை மாநகராட்சி தொடர்ந்து இதுபோன்ற சிறப்பு தூய்மைப் பணிகளை மேற்கொள்வதுடன், மாநகரம் முழுவதும் உள்ள பேருந்து நிழற்குடைகளைத் தூய்மையாகவும், பாதுகாப்பாகவும், சுகாதாரமான முறையிலும் பராமரிப்பதற்கான வழக்கமான தூய்மைப் பணிகளையும் தொடர்ந்து வலுப்படுத்தும்.

பேருந்து பயணிகள் மற்றும் பொதுமக்கள் பேருந்து நிழற்குடைகளிலும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் குப்பைகளைக் கொட்டுவதைத் தவிர்த்து, அங்கு வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் கழிவுகளை முறையாகப் போட்டு, தூய்மையைப் பராமரிக்க பெருநகர சென்னை மாநகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X