

ஆனைமலை
ஆனைமலை ஒன்றியத்தில் 350 ஏக்கருக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது என்று வேளாண் அதிகாரி தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
ஆனைமலை ஒன்றியத்தில் ஆயிரம் ஏக்கரில் பந்தல் விவசாயமும், 23 ஆயிரம் ஹெக்டரில் தென்னை விவசாயம் நடைபெறுகிறது. இதற்கிடையே தென்னை மரங்களுக்கு இடையே பாக்கு, ஜாதிக்காய், வாழை உள்ளிட்ட ஊடுபயிர்கள் பயிரிட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆனைமலை அருகே உள்ள கோட்டூரில் தோட்டக்கலைத்துறை சார்பாக சொட்டுநீர் பாசன திட்டம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஜமுனாதேவி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- அனைத்து மண் வகையிலும் தண்ணீர் தட்டுப்பாட்டினை தவிர்த்து விவசாயம் செய்வதற்கு சொட்டு நீர் பாசனம் உதவுகிறது. மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் துணைநீர் மேலாண்மைக்கும் சேர்த்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் சொட்டுநீர் பாசனத்திற்கு பணி உத்தரவு பெரும்போது துணை நீர் மேலாண்மைக்கும் சேர்த்து அனுமதி வழங்கப்படும்.
350 ஏக்கரில் சொட்டுநீர் பாசனம்
மின்மோட்டார் அமைக்க ரூ.15 ஆயிரம், நீர்நிலைத் தொட்டிக்கு ரூ.40 ஆயிரம், குழாய் அமைப்பதற்கு ரூ.10 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது. மேலும் பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டத்தில் இணையும் விவசாயிகளுக்கு தொட்டி, மின் மோட்டார் அமைக்க கூடுதல் மானியம் வழங்கப்பட உள்ளது. மத்திய, மாநில அரசுகளின் நிதியுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும் மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியம் வழங்கப்படும். ஏற்கனவே சொட்டுநீர் பாசனம் அமைத்து 7 ஆண்டுகள் கடந்து இருந்தால் உபகரணங்கள் மாற்றிக் கொள்வதற்கு மீண்டும் மானியம் வழங்கப்படுகின்றது. மேலும் ஆனைமலை ஒன்றியத்தில் 2023- 2024 ஆம் ஆண்டிற்கு 350 ஏக்கரில் தோட்டக்கலை பயிர்களுக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்காக 96 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஆனைமலை ஒன்றியத்தை சுற்றி உள்ள 19 ஊராட்சிகளிலும் சொட்டுநீர் பாசன திட்டத்தின் விழிப்புணர்வு முகாம் வரும் நாட்களில் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார். முகாமில் வேளாண் அதிகாரிகள், விவசாயிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.