குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா.. 350 சிறப்பு பஸ்கள் ஏற்பாடு

கடந்த ஆண்டைவிட அதிகமான வாகன நிறுத்துமிடங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் இளம்பகவத் தெரிவித்தார்.
குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா.. 350 சிறப்பு பஸ்கள் ஏற்பாடு
Published on

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழா ஏற்பாடுகள் குறித்து நேற்று மாவட்ட கலெக்டர் இளம்பகவத் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார், உதவி கலெக்டர் (பயிற்சி) புவனேஷ் ராம், திருச்செந்தூர் உவி கலெக்டர் கௌதம், தாசில்தார் பாலசுந்தரம் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா கடந்த நற்றுமுன்தினம் தொடங்கியது. வருகிற 4-ந்தேதி வரை திருவிழா நடைபெற உள்ளது. இத்திருவிழா ஏற்பாடுகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட அனைத்துதுறைச்சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி, கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு இடங்களில் போக்குவரத்து வசதிகள், வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதிகள், தற்காலிக பஸ் நிறுத்தம், குடிநீர் வசதி, மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு பஸ்கள்

கடந்த ஆண்டைவிட அதிகமான வாகன நிறுத்துமிடங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில் 39 தற்காலிக வாகன நிறுத்துமிடங்களும், 3 முக்கிய சாலைகளில் தற்காலிக பஸ் நிறுத்தங்களும் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்களின் வசதிக்காக 350 அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். மேலும், வருகிற 2-ந் தேதியும், 3-ந் தேதியும் பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நாட்களில் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

மேலும், பக்தர்களின் தேவைகளை பூர்த்தி செய்கின்ற வகையில், ஏராளான குடிநீர் தொட்டிகளும், சுகாதார வளாகங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவற்றை பராமரிக்க போதிய தூய்மைப்பணியாளர்கள் நியமிக்கப்படுவர். சுகாதாரத்துறை சார்பாக 3 மருத்துவ குழுவினர் 24மணி நேரமும் பணியில் இருப்பர். இதுதவிர நடமாடும் மருத்துவ குழுவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ட்ரோன் மூலம் கண்காணிப்பு

கடற்கரைகளில் குளிக்கின்ற பக்தர்களின் பாதுகாப்புக்காக நீச்சல் வீரர்கள், கடற்கரை பாதுகாப்பு போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபடவுள்ளனர். அவர்களுடன் இணைந்து, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை வீரர்களும் ரோந்து பணியில் ஈடுபடவுள்ளனர். பாதுகாப்பு பணியில் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் பட்சத்தில் கூடுதலாக ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுவர். முக்கிய இடங்களில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும். ட்ரோன் கேமராக்கள் மூலமாகவும் தீவிரமாக கண்காணிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com