

சென்னை,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-
மிக்ஜம் புயலின் காரணமாக தமிழ்நாட்டின் வட மாவட்ட மக்களின் குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய மாவட்ட மக்களின் சமூக வாழ்க்கை முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது. உயிரிழப்புகள், உடைமை இழப்புகள் ஏற்பட்டுள்ளன. வரலாறு காணாத பெருமழை 24 மணி நேரத்தில் தொடர்ந்து கொட்டியதால் சென்னை பெருநகரமே மிதக்கும் சூழல் ஏற்பட்டது.
நிவாரண பணிகளுக்காக ரூபாய் 5000 கோடி வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம், தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது. மத்திய அரசின் உள்துறை அமைச்சர் ராஜநாத் சிங், நேரடியாக வந்து வானில் பறந்து நிலைமையை பார்வையிட்டும் சென்றிருக்கிறார். ஆனால் வெறும் 450 கோடி ரூபாய் வழங்குவதாக மத்திய அரசு அறிவித்திருப்பது ஏமாற்றம் அளிப்பதாகும். இது யானை பசிக்கு சோளப்பொறி கொடுப்பதைப் போன்றதாகும்.
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை மூலம், மாநில அரசுகளுக்கு எந்த வருவாயும் இல்லாத வகையில் மத்திய அரசே வரி வசூலித்துச் சென்று விடுகிறது. இந்தியாவில் அதிக வரி செலுத்தும் மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்று. அந்த மாநில மக்கள் பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிற்கும்போது, உரிய நிவாரணம் வழங்க மத்திய அரசு மறுப்பது அடாவடி செயலாகும்.
கடுமையான நிதி பற்றாக்குறைக்கு தமிழ்நாடு ஆட்பட்டுள்ளது. ஆனாலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் கடமையை தமிழ்நாடு அரசு உணர்ந்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
இந்த புயல், வெள்ளப்பெருக்கால் இறந்தவர்கள், கால்நடைகள், ஆடுகள் இழப்பு, பாதிக்கப்பட்ட இயந்திரப் படகுகள், வல்லங்கள், கட்டு மரங்கள், குடிசை வீடுகள் ஆகியவற்றுக்கு நிவாரணத் தொகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
குடும்ப அட்டைகளுக்கு ரூபாய் 6000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயிர் இழப்பீடு நிவாரணமாக ஒரு ஹெக்டேருக்கு ரூபாய் 17,000 அறிவிக்கப்பட்டுள்ளது குறைவானதாகும். விவசாயிகள் பெருமளவில் இழப்புக்கு உள்ளானதைப் பரிசீலித்து ஒரு ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் என உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறோம்.
இதே போல சிறு, குறு தொழில்களும், பதிப்பகங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. நடைமுறை மூலதனத்தை இழந்து தொழில் செய்ய முடியாத அளவுக்கு பெருத்த பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதால், தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்து அவற்றுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். அதேபோல பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் குறிப்பாக இருசக்கர வாகனங்கள் ஓட்ட முடியாத அளவுக்கு பழுதுபட்டுள்ளன. இவற்றுக்கும் நிவாரணம் வழங்குவது பற்றி அரசு பரிசீலிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.