

சென்னை,
திடக்கழிவு மேலாண்மைக் கட்டமைப்பை வலுப்படுத்தவும், வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் முன்னேற்பாடுகளை மேம்படுத்தவும் ரூ.65 கோடி மதிப்பீட்டில் 356 புதிய வாகனங்களை சென்னை மாநகராட்சி ஆணையாளர் தொடங்கி வைத்தார்.
இதுதொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னையின் திடக்கழிவு மேலாண்மைக் கட்டமைப்பை வலுப்படுத்தவும், 2026-ஆம் ஆண்டின் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் முன்னேற்பாடுகளை மேம்படுத்தவும், சுமீத் எல்கோவின் ஏற்கனவே உள்ள வாகன தொகுப்புடன் ரூ.65 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக 356 புதிய வாகனங்களும், 2,873 குப்பைத் தொட்டிகள் மற்றும் உபகரணங்களும் சேர்க்கப்பட்டு, அதன் பயன்பாட்டினை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., இன்று (10.06.2026) தேனாம்பேட்டை மண்டலம், லாயிட்ஸ் காலனியில் தொடங்கி வைத்தார்.
மேலும், மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் மாநகரை தூய்மையாக பராமரிப்பதிலும், பருவமழை காலத்திலும் அத்தியாவசிய பணிகள் தொடர்ந்து நடைபெறுவதை உறுதி செய்வதிலும் முக்கிய பங்காற்றும் தூய்மைப் பணியாளர்களை பாராட்டும் வகையில், அவர்களுக்கு சீருடைகள் மற்றும் மழைக்கோட்டுகளையும் வழங்கினார்.
சென்னையின் திடக்கழிவு மேலாண்மை கட்டமைப்பை வலுப்படுத்தவும், 2026-ஆம் ஆண்டின் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் முன்னேற்பாடுகளை மேம்படுத்தவும், ஏற்கனவே உள்ள வாகன தொகுப்புடன் கூடுதலாக 356 புதிய வாகனங்களும், 2,873 குப்பைத் தொட்டிகள் மற்றும் உபகரணங்களும் சேர்க்கப்பட்டுள்ளது.
இதில் 283 மின்கலத்தில் இயங்கும் வாகனங்கள் (BOVs), 37 குப்பை அழுத்தும் வாகனங்கள் (Refuse Compactors), 28 இரண்டு டன் திறன் கொண்ட வாகனங்கள், 7 கொக்கி மூலம் கழிவுத் தொட்டிகளை ஏற்றும் வாகனங்கள் (Hook Loaders), 1 இயந்திர பெருக்கி வாகனம் (Mechanical Sweeper), 2,854 எண்ணிக்கையிலான 1,100 லிட்டர் கொள்ளளவு கொண்ட குப்பைத் தொட்டிகளும், 18 எண்ணிக்கையிலான 20 கன மீட்டர் கொள்ளளவு கொண்ட ஸ்கிப் தொட்டிகளும் அடங்கும்.
இந்தக் கூடுதல் வசதிகள் மூலம் குப்பைகளை சேகரித்தல் மற்றும் எடுத்துச் செல்லும் பணிகள் வலுப்பெறும். குறிப்பாக, அதிக அளவில் உருவாகும் கழிவுகளைக் கையாள்வதுடன், கனமழையின்போது அதிக அளவில் குப்பைகள் சேரும் பகுதிகளில் களப்பணிக் குழுக்கள் விரைவாகச் செயல்படவும் உதவும்.
இதன் மூலம், பருவமழை காலம் முழுவதும் குப்பைகளை உரிய நேரத்தில் அகற்றுதல், சாலைகளை தூய்மையாக பராமரித்தல் மற்றும் தடையற்ற திடக்கழிவு மேலாண்மைச் சேவைகளை உறுதி செய்தல் ஆகியவை நோக்கமாக கொண்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில், துணை ஆணையாளர் (சுகாதாரம்), தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், இ.ஆ.ப., சுமீத் எல்கோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் மஹ்மூத் சையத் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.