

சென்னை,
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்புப் படையினர் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒடிசா மாநிலம் புவனேஸ்வரிலிருந்து சென்னை வழியாக புதுச்சேரி நோக்கி சென்ற விரைவு ரெயில் எழும்பூர் வந்தடைந்தது.
அந்த ரெயிலில் ஆர்.பி.எப். குழுவினர் ஏறி சோதனை நடத்தினார்கள். ரெயிலின் 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டியில் சோதனையிட்டபோது அங்கு கேட்பாரற்று கிடந்த பையில் 31 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு சுமார் ரூ.16 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். பின்னர் கைப்பற்றப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் ராமரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதை போன்று சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் குற்றப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் புருலியா எக்ஸ்பிரஸ் ரெயிலின் பொதுப் பெட்டியில் கேட்பாரற்று இருந்த பையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.2.5 லட்சம் ஆகும். பின்னர் கஞ்சா திருவல்லிக்கேணி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது.