சென்னையில் ரூ.34 கோடியில் 36 புதிய பூங்காக்கள்! - ரூ.9.52 கோடியில் 11 விளையாட்டுத் திடல்கள் அமைக்க திட்டம்

ஒப்பந்த நடவடிக்கைகள் முடிவுற்றவுடன் இப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி
Published on: 

சென்னை,

முதல்-அமைச்சரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பெருநகர சென்னை மாநகராட்சியில் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் வகையில் முதற்கட்டமாக ரூ.34.46 கோடி மதிப்பீட்டில் புதிதாக 36 பூங்காக்களும், ரூ.9.52 கோடி மதிப்பீட்டில் 11 புதிய விளையாட்டுத் திடல்களும் அமைக்கப்படவுள்ளது.

ரூ.1.50 லட்சம் கோடியில் திட்டம்

இது தொடர்பாக, பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழ்நாடு முதல்-அமைச்சர், அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளும் அடிப்படை வசதிகளைப் பெற்றிடும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளையும் உள்ளடக்கிய முதல்-அமைச்சரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் (CMIUDM) 2026-2031னை அறிவித்துள்ளார்கள்.

இத்திட்டம் ஐந்து ஆண்டுகளில் ரூ. 1.50 லட்சம் கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் குடிநீர் விநியோகம், பாதாளச் சாக்கடைத் திட்டம், திடக் கழிவு மேலாண்மை, சாலைகள் மற்றும் போக்குவரத்து, நகர்ப்புற பசுமையாக்கல், நீர்நிலைகள் சீரமைப்பு, சமூக உள்கட்டமைப்பு, டிஜிட்டல் ஆளுகை மற்றும் பொது சுகாதார உள்கட்டமைப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

இத்திட்டத்தின் கீழ், பணிகளை மேற்கொள்வதற்கு நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையால் விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் ரூபாய் 2000 கோடி மதிப்பீட்டில் பசுமையாக்கல், பொழுதுபோக்கு மற்றும் திறந்தவெளிகள் மேம்பாடு (Urban Greening, Recreation & Open Spaces) பணிகள் 2026-2031ல் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சியில் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் வகையில் முதற்கட்டமாக ரூபாய் 34.45 கோடி மதிப்பீட்டில் கீழ்காணும் 36 இடங்களிலும் ரூபாய் 9.52 கோடி மதிப்பீட்டில் 11 புதிய விளையாட்டுத் திடல்களும் அமைக்கப்படவுள்ளது.

36 புதிய பூங்காக்கள்:

ஆலந்தூர் மண்டலத்தில் கத்திப்பாரா - விமான நிலையம் நுழைவாயில் பகுதி மற்றும் விமான நிலையத்தில் முக்கியப் பிரமுகர்கள் வருகை தரும் பகுதி, மணலி மண்டலத்தில் செந்தூர் குமரன் நகர், எலந்தனூர், பெரியார் நகர், வடபெரும்பாக்கம் - அன்பு வளர்மதி நகர், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 2பி பாலத்திற்கு அடியில் உள்ள மணலி சாலை, அம்பத்தூர் மண்டலத்தில் சி.டி.எச். சாலை, குமரன் நகர், பார்க் சாலை, ஜீவன் பீமா நகர் 5ஆவது பிளாக் அருகில், ஜீவன் பீமா நகர் 41ஆவது பிளாக் அருகில், ஜீவன் பீமா நகர் 11ஆவது பிளாக் அருகில், ஜீவன் பீமா நகர் 4ஆவது பிளாக் அருகில், குருசாமி தெரு, முகப்பேர் தொழிற்பேட்டை பகுதி, அண்ணாநகர் மண்டலத்தில் ஈ.வி.ஆர். சாலை, நெல்சன் மாணிக்கம் சாலை, தேனாம்பேட்டை மண்டலத்தில் பீட்டர்ஸ் சாலை, கோடம்பாக்கம் மண்டலத்தில் நெற்குன்றம் கிராமப் பகுதி, பெருங்குடி மண்டலத்தில் விஜிபி 7ஆவது குறுக்குத் தெரு, சாரதி நகர் 2ஆவது தெரு, பாலாஜி நகர் 19ஆவது தெரு, சோழிங்கநல்லூர் மண்டலத்தில் கிழக்கு கடற்கரை சாலை, குமரன்குடில் 3ஆவது குறுக்குத் தெரு, கண்ணகி நகர் 3ஆவது, 4ஆவது, பிரதான சாலை, கண்ணகி நகர் 22ஆவது, 54ஆவது, 46ஆவது, 38ஆவது குறுக்குத் தெரு, ஆதித்யாராம் நகர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் 37ஆவது குறுக்குத் தெரு, ஜவஹர் நகர் பிரதான சாலை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் 10ஆவது பிரதான சாலை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் 39ஆவது குறுக்குத் தெரு ஆகிய 36 இடங்களில் முதல்-அமைச்சரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் (CMIUDM) நிதியின் கீழ் ரூபாய் 34.45 கோடி மதிப்பீட்டில் புதிய பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளது.

11 புதிய விளையாட்டுத் திடல்கள்:

மாதவரம் மண்டலத்தில் அமிர்தம்மாள் நகர், அசோகா தெரு, தண்டையார் பேட்டை மண்டலத்தில் சர்மா நகர் 9ஆவது தெரு, டாக்டர் அம்பேத்கர் கலைக் கல்லூரி, ஈ.எச். சாலை, மேயர் கிருஷ்ணமூர்த்தி நகர், கோடம்பாக்கம் மண்டலத்தில் ஆர்.வி.நகர் 69ஆவது தெரு, சோழிங்கநல்லூர் மண்டலத்தில் சி.எல்.ஆர்.ஐ. நகர் 1ஆவது பிரதான சாலை, டி.என்.எச்.பி. ஏ சாலை, டி.என்.எச்.பி. பி6 சாலை, டி.என்.எச்.பி. சி12 சாலை உள்ளிட்ட 11 இடங்களில் முதலமைச்சரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் ( CMIUDM) நிதியின் கீழ் ரூபாய் 9.52 கோடி மதிப்பீட்டில் புதிய விளையாட்டுத் திடல்கள் அமைக்கப்படவுள்ளது.

இந்த 36 புதிய பூங்காக்கள் மற்றும் 11 விளையாட்டுத் திடல்கள் அமைப்பதற்கான ஒப்பந்தம் கோரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒப்பந்த நடவடிக்கைகள் முடிவுற்றவுடன் இப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X