3,600 கோவில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது - அமைச்சர் சேகர்பாபு தகவல்

12 ஆண்டுகள் நிறைவடைந்த கோவில்களை கண்டறிந்து பணிகளை மேற்கொண்டு தொடர்ந்து குடமுழுக்கு நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
3,600 கோவில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது - அமைச்சர் சேகர்பாபு தகவல்
Published on

தமிழக அரவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (04.09.2025) சென்னை, சூளை, அங்காளபரமேஸ்வரி மற்றும் காசி விசுவநாதர் சுவாமி கோவிலில் நடைபெற்ற குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

பின்னர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின், இந்து சமய அறநிலையத்துறை ஆகம விதிப்படி குடமுழுக்கு நடைபெற்று 12 ஆண்டுகள் நிறைவடைந்த கோவில்களை கண்டறிந்து பணிகளை மேற்கொண்டு தொடர்ந்து குடமுழுக்கு நடத்தி வருகின்றது. அந்த வகையில் இன்றைய தினம் நடைபெற்ற 95 கோவில்களின் குடமுழுக்கையும் சேர்த்து 3,600 கோவில்களுக்கு இதுவரை குடமுழுக்கு நடந்தேறியுள்ளது.

சென்னையில் சூளை அங்காளபரமேஸ்வரி கோவில், புரசைவாக்கம் வேத விநாயகர் கோவில், பேரக்ஸ் ரோடு ஆஞ்சநேயர் கோவில், தங்க சாலை கமல விநாயகர் கோவில், அயனாவரம் பவானி அம்மன் கோவில், அண்ணா நகர் அங்காளபரமேஸ்வரி கோவில், விருகம்பாக்கம் மகாகாளியம்மன் கோவில், மயிலாப்பூர் சித்தேரி விநாயகர் கோவில் என 8 கோவில்களுக்கு இன்று வெகு விமரிசையாக குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.

சூளை அங்காள பரமேஸ்வரி மற்றும் காசி விசுவநாதர் கோவில் நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவிலாகும். கோவிலுக்கு 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இறுதியாக குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. தற்போது ரூ.28.56 லட்சத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. கோவிலின் விமானம் மற்றும் கொடிமரமானது 1,310 கிலோ செப்பு தகட்டில் நகாசு வேலைகள் செய்யப்பட்டு, அதன் மீது 874 கிராம் தங்கத்தை கொண்டு தங்க மூலாம் பூசப்பட்டுள்ளது. இப்படி கோவில்களில் பணிகள், பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் மீட்டெடுப்பு, புதிய தேர்கள் உருவாக்கம் மற்றும் மராமத்து பணிகள், கட்டணமில்லா ஆன்மிகப் பயணங்கள் என ஆன்மிகப் பெரியோர்கள் மற்றும் இறை அன்பர்கள் போற்றும் வகையில் திராவிட மாடல் அரசு ஆன்மிக அரசாக திகழ்ந்து வருகிறது என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என். ஸ்ரீதர், சென்னை மண்டல இணை ஆணையர் ஜ. முல்லை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  கே. எஸ். ரவிச்சந்திரன், பெருநகர சென்னை மாநகராட்சி நியமனக்குழு உறுப்பினர்  சொ.வேலு, உதவி ஆணையர் க.சிவகுமார், கோவில் செயல் அலுவலர் பி. சண்முகம், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com