மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து ரூ.3.65 லட்சம் திருட்டு - 2 மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

வானூர் போலீஸ் நிலையத்தில் சுப்புராயன் புகார் செய்தார்.
வலைவீச்சு
Published on: 

வானூர்,

வானூரில் வியாபாரியின் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து ரூ.3.65 லட்சத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சவுக்கு வியாபாரி

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா கொண்டிமேடு கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்புராயன் (வயது 61). சவுக்கு வியாபாரி. இவர் நேற்று மதியம் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.3 லட்சத்து 65 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளின் பெட்டியில் வைத்து கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார்.

வழியில் வானூர் சார் பதிவாளர் அலுவலகம் எதிரே உள்ள பத்திர எழுத்தர் அலுவலகத்துக்கு செல்ல மோட்டார் சைக்கிளை சாலையோரமாக நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, மோட்டார் சைக்கிளின் பெட்டி உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

கண்காணிப்பு கேமரா ஆய்வு

இதுகுறித்து வானூர் போலீஸ் நிலையத்தில் சுப்புராயன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அதில் மர்ம நபர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளின் பெட்டியை உடைத்து பணத்தை திருடி செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அதை துருப்புச்சீட்டாக வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X