பவுர்ணமி, வார விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 3,710 சிறப்பு பஸ்கள் இயக்கம்

பவுர்ணமி, வார விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 3,710 சிறப்பு பஸ்கள் இயக்கம்
சிறப்பு பஸ்கள் இயக்கம்
Published on

சென்னை,

பவுர்ணமி, வார விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 3,710 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

சிறப்பு பஸ்கள் இயக்கம்

இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் குணசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பவுர்ணமி மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 28-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று 1,140 பஸ்களும், 29-ந் தேதி (சனிக்கிழமை) 1,020 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று (வியாழக்கிழமை) முதல் 29-ந் தேதி (சனிக்கிழமை) வரை ஒவ்வொரு நாளும் தலா 130 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாதவரத்திலிருந்து கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, போளூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு 27 முதல் 29-ந் தேதி வரை ஒவ்வொரு நாளும் 90 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் 30-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 690 சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com