

சென்னை,
தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. தற்போது வரை 23 மெகா தடுப்பூசி முகாம்கள் தமிழகத்தில் நடந்துள்ளது. அதில் இதுவரை 3.79 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் நேற்று நடைபெற்ற 24-வது மெகா தடுப்பூசி முகாமில், காலக்கெடு முடிந்தும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது. அதன்படி, நேற்று ஒரே நாளில் 5 லட்சத்து 65 ஆயிரத்து 494 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் 82 ஆயிரத்து 812 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 4 லட்சத்து 63 ஆயிரத்து 494 பேர் 2-வது தவணை தடுப்பூசியும், 19 ஆயிரத்து 188 பேர் பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்திக்கொண்டனர்.
இதுவரை 18 வயதுக்கு மேற்பட்ட 91.90 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 74.44 சதவீதம் பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. மேலும், 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் 84.08 சதவீதம் பேருக்கு முதல் தவணையும், 55.40 சதவீதம் பேருக்கு 2-வது தவணையும் செலுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் இதுவரை நடந்த 24 மெகா தடுப்பூசி முகாம்களின் மூலம் 3 கோடியே 84 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.