பரனூர் சுங்கச்சாவடியில் 40 நாட்களில் 3.85 லட்சம் வாகனங்கள் விதிமீறல்; ரூ.1.38 கோடி அபராதம்

அபராதத்தை, 72 மணி நேரத்துக்குள் ஆன்லைனில் செலுத்தினால், 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.
பரனூர் சுங்கச்சாவடியில் 40 நாட்களில் 3.85 லட்சம் வாகனங்கள் விதிமீறல்; ரூ.1.38 கோடி அபராதம்
Published on: 

சென்னை,

தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை 179பி தாம்பரம் - திண்டிவனம் பிரிவில் உள்ள பரனூர் சுங்கச்சாவடியில் மின்னணு சுங்க வசூல் அமல்படுத்தப்பட்டுள்ளது. சுங்கச்சாவடியில் இருந்து 200 மீட்டருக்கு முன்பே மைக்ரோ ஸ்கேனிங் மூலம் வாகனங்கள் நம்பர் பிளேட்டுகள் ஸ்கேனிங் செய்யப்பட்டு, அதன் மூலம் ஆட்டோமேட்டிக் முறையில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சென்னை-திருச்சி மார்க்கம், திருச்சியில்-சென்னை மார்க்கத்தில் செல்லும் வாகனங்கள் சுங்கச்சாவடியில் நிற்காமலேயே ஸ்கேன் செய்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது எரிபொருள் மற்றும் நேரம் மிச்சப்படுவதோடு, போக்குவரத்து நெரிசலையும் குறைக்கிறது. மேலும், சுங்கச் செயல்பாடுகளை மிகவும் வெளிப்படையானதாக, செலவு குறைந்ததாக மாற்றுகிறது.

இந்த நிலையில், பரனுார் சுங்கச்சாவடியில் தடுப்புகள் இல்லாத தானியங்கி கட்டண முறை அறிமுகம் செய்யப்பட்ட 40 நாட்களில் 3.85 லட்சம் வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் விதிமீறலில் ஈடுபட்டுள்ளன. இதையடுத்து 3.27 லட்சம், இ-சலான்கள் வாயிலாக, ரூ.1.38 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

கடந்த மாதம் (அக்டோபர்) 1-ந்தேதி முதல் இந்த மாதம் (நவம்பர்) 9-ந்தேதி வரை 40 நாட்களில் பரனுார் சுங்கச்சாவடியை 24.69 லட்சம் வாகனங்கள் கடந்துள்ளன. இதில், 20.83 லட்சம் வாகனங்கள் முறையாக, 'பாஸ்டேக்' மூலம் கட்டணம் செலுத்தியுள்ளன. போதிய பணம் இல்லாதது, 'பிளாக் லிஸ்ட்' செய்யப்பட்ட அட்டை, பாஸ்டேக் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் 3 லட்சத்து 85 ஆயிரத்து 679 வாகனங்கள் விதிமீறலில் ஈடுபட்டுள்ளன.

கட்டணம் செலுத்தாத வாகனங்களுக்கு, 'வாகன்' தளம் மூலம் இரட்டிப்பு அபராதத்துடன் இ-சலான் அனுப்பப்படுகிறது. அபராதத்தை, 72 மணி நேரத்துக்குள் ஆன்லைனில் செலுத்தினால், 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். தவறினால், சம்பந்தப்பட்ட வாகனத்தின் பாஸ்டேக் முடக்கப்படுவதுடன் பிற சுங்கச்சாவடிகளைக் கடக்கவும் தடை ஏற்படுத்தப்படும். வாகனப் பெயர் மாற்றம், தடையில்லாச் சான்று உள்ளிட்ட சேவைகளையும் பெற முடியாது.

இந்த 40 நாட்களில், 3 லட்சத்து 27 ஆயிரத்து, 927 இ-சலான்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அவற்றில், 68 ஆயிரத்து, 226 வாகன ஓட்டிகள் அபராதம் செலுத்திய வகையில், 1 கோடியே 38 லட்சத்து 8,290 ரூபாய் வசூலாகியுள்ளது. மேலும் அபராதத்தைத் தவிர்க்க, நம்பர் பிளேட்டுகளைச் சேதப்படுத்தினாலோ, மாற்றியமைத்தாலோ புகைப்பட ஆதாரங்களுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்து வழக்குப்பதிவு செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

X