கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் தீ விபத்தில் 386 பேர் உயிரிழப்பு

தீயில் சிக்கிய 611 பேரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
சென்னை,
தமிழகத்தில் கடந்த 2020-2024 வரையில் 5 ஆண்டுகளில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 930 தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ரூ.211 கோடியே 4 லட்சம் மதிப்பிலான சொத்துகள் தீயில் கருகி நாசமாகியுள்ளது. ரூ.2 ஆயிரத்து 425 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 5 ஆண்டுகளில் தீ விபத்தில் சிக்கி 386 பேர் உயிரிழந்துள்ளனர். தீயில் சிக்கிய 611 பேரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
இதுகுறித்து, தீயணைப்பு துறை அதிகாரிகள் கூறியபோது, ‘ஒவ்வொரு உயிரும் எங்களுக்கு மிக முக்கியம். தீ விபத்து என்று அழைப்பு வந்ததும், சில நிமிடங்களில் தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் சென்று அங்கு சிக்கியவர்களை முதலில் மீட்டுவிடுவோம்.
சில நேரங்களில் தீ விபத்தில் சிக்கிய பொதுமக்கள் சிலரை மீட்க முடியாமல் சென்று விடுகிறது. இதுபோன்று திடீரென ஏற்படும் தீ விபத்துகளை எவ்வாறு தடுக்க வேண்டும்? அதில் இருந்து தங்களை எப்படி காத்துகொள்ள வேண்டும்? என பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். தொடர் விழிப்புணர்வு மூலம் பலர் பயன்பெற்று வருகின்றனர்.






