

சென்னை,
தமிழகத்தில் துணை மருத்துவ படிப்புகளில் புதிதாக 3,878 இடங்கள் உருவாக்கப்பட்டு, தற்போது நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் சேர்க்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள துணை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, https://tnmedicalselection.net என்ற இணையதளம் வாயிலாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, தமிழகத்தில் புதிய செவிலியர் கல்லூரிகள் மற்றும் துணை மருத்துவப் படிப்புகள் தொடங்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் அறிவித்தார். அதன்படி, புதிய படிப்புகள் மற்றும் கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நாமக்கல், திருச்சி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, கோவை ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை ஆகிய 8 இடங்களில் புதிய செவிலியர் படிப்புகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, புதிதாக தொடங்கப்பட்ட செவிலியர் கல்லூரிகளில் 660 பி.எஸ்சி. நர்சிங் இடங்களும், ஏற்கனவே செயல்பட்டு வரும் அரசு செவிலியர் கல்லூரிகளில் கூடுதலாக 440 பி.எஸ்சி. நர்சிங் இடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மொத்தம் 1,100 பி.எஸ்சி. நர்சிங் இடங்கள் கூடுதலாக கிடைத்துள்ளன.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள 12 துணை மருத்துவப் படிப்புகளில் 1,646 இடங்களும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 9 படிப்புகளில் 1,132 இடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
புதிய செவிலியர் படிப்புகளுக்கான 1,100 இடங்களையும் சேர்த்து, மொத்தம் 3,878 இடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. இந்த இடங்கள் தற்போது நடைபெற்று வரும் மாணவர் சேர்க்கையின் மூன்றாம் கட்ட கலந்தாய்வில் சேர்க்கப்பட்டுள்ளதாக மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமைச்சர் அருண்ராஜ் கூறியதாவது:-
தமிழகத்தில் 2014-ம் ஆண்டுக்குப் பிறகு புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படாத நிலை இருந்து வந்தது. சட்டசபையில் முதல்-அமைச்சர் அறிவித்ததைத் தொடர்ந்து, அந்த அறிவிப்பை உடனடியாக நிறைவேற்றும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டு, மாணவர் சேர்க்கைக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த வாய்ப்பை மாணவ-மாணவிகள் நல்ல முறையில் பயன்படுத்தி, தங்களுடைய உயர்கல்விப் பயணத்தில் சிறந்து விளங்க வேண்டும். அறிவித்தோம்; நிறைவேற்றினோம். இதுதான் அண்ணனின் அரசு என்று அவர் தெரிவித்தார்.