

சென்னை,
387-வது மெட்ராஸ் தினத்தை முன்னிட்டு “சென்னை முதல் மெட்ராஸ்” சிறப்பு புகைப்படக் கண்காட்சியை அமைச்சர்கள் ராஜ்மோகன் மற்றும் ராஜேஷ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
சென்னையின் வரலாற்றையும், பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வகையில், 387-வது மெட்ராஸ் தினக் கொண்டாட்டங்கள் தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மெட்ராஸ் தினத்தை முன்னிட்டு சுற்றுலாத் துறை சார்பில்,
● மெட்ராஸ் போட்டோ பிளாகர்ஸ்” (Madras Photo Bloggers) குழுவினர் இணைந்து நடத்திய புகைப்படப் போட்டி
● “இன்ஸ்டாகிராம் மெட்ராஸ் தினம் – 2026” கட்டுரைப் போட்டி
● “கலைகள் நாம்” (Kalaigal Naam) குழுவினர் நடத்திய சுவர் ஓவியப் போட்டி
● “நம் வீடு, நம் ஊரு, நம் கதை” குழுவினர் செனட் ஹவுஸ் – மெட்ராஸ் பல்கலைக்கழகம்,சேப்பாக்கம் அரண்மனை,புனித ஜார்ஜ் கோட்டை, விக்டோரியா பொது மண்டபம், மெட்ராஸ் மெமோரியல் ஹால் உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் ஒருங்கிணைத்த பாரம்பரிய நடைப்பயணங்கள்
● “சைக்ளிங் யோகிஸ்” (Cycling Yogis) குழுவினர் நடத்திய “மெட்ராஸ் – தி ஃபர்ஸ்ட் சைக்ளிங் ட்ரெயில்” (Madras – The First Cycling Trail) நிகழ்ச்சி நடைபெற்றது.
● வரலாற்று அறிஞர் வி. ஸ்ரீராம் தொகுத்து வழங்கிய புனித ஜார்ஜ் கோட்டை வரலாற்று நடைப்பயணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இன்று (22.08.2026) சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், “சென்னை டு மெட்ராஸ்“ என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சியை பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன், சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்து புகைப்படங்களை பார்வையிட்டனர்.
சர்வதேசப் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் டாக்டர் எல். ராமச்சந்திரன் கொரோனா ஊரடங்கு காலத்தில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் பதிவு செய்த கறுப்பு-வெள்ளை புகைப்படங்களின் சிறப்புத் தொகுப்பு இக்கண்காட்சியின் முக்கிய சிறப்பம்சமாகும். இப்புகைப்படங்கள் சென்னையின் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடக்கலை, நகரின் தனித்துவமான அடையாளங்கள் மற்றும் பண்பாட்டு மரபுகளை அழகிய கலைநயத்துடன் வெளிப்படுத்துகின்றன.
22.08.2026 முதல் 31.08.2026 வரை நடைபெறும் இந்த கண்காட்சியை பொதுமக்கள், மாணவர்கள், கலை ஆர்வலர்கள், புகைப்படக் கலைஞர்கள், கலைச் சேகரிப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் கண்காட்சியை இலவசமாகப் பார்வையிடலாம்.
அதனைத் தொடர்ந்து, இன்று, சென்னை விக்டோரியா பொது அரங்கத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திரைப்பட பின்ணனி பாடகி மீனாட்சி இளையராஜா மற்றும் முத்து மண்ணிசை பாடல்கள் பாட அரவிந்த் கரகம், குருநாதன் குழு ஒயில், மயிலாட்டம் கலை நிகழ்ச்சிகள், "சென்னை முதல் மெட்ராஸ் வரை”, “சென்னையும் பாரதியும்” உள்ளிட்ட காணொளிகள் மற்றும் “மெட்ராஸ் வரலாற்றுத் தொடர்” ஆகியவை வெளியிடப்பட்டன. மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காணொளிகளும் வெளியிடப்பட்டன.
சென்னையின் உணவு, கலாச்சாரம் மற்றும் தனித்துவமான அடையாளங்களை உலக அளவில் அறிமுகப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட “டேஸ்ட் ஆஃப் சென்னை” (Taste of Chennai) இலச்சினையும் வெளியிடப்பட்டது. மேலும், காமிக் லைப்ரரி சார்பில் சென்னையின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட “தி லாஸ்ட் டிராம்” (The Last Tram) காமிக் புத்தகமும் வெளியிடப்பட்டது.
இறுதியாக பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கும், நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்த குழுக்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ்குமார் சான்றிதழ்கள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவித்தார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.