மாளிகைமேட்டில் 3-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி

கங்கைகொண்ட சோழபுரம் அருகே உள்ள மாளிகைமேட்டில் 3-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் ஏராளமான பொருட்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாளிகைமேட்டில் 3-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி
Published on

பழங்கால மண்பானை

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் அருகே மாளிகைமேடு பகுதியில் தமிழக அரசு தொல்லியல் துறையின் சார்பில் 2-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி நடந்து வந்தது. இந்த அகழாய்வு பணியின்போது கடந்த மார்ச் மாதம் 4-ந்தேதி பழங்கால தங்ககாப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் மேலும் நடந்த அகழாய்வு பணியின்போது மார்ச் 25-ந்தேதி பழங்கால மண்பானை, மண்ணாலான கெண்டி செம்பின் மூக்குப்பகுதி ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த அகழாய்வு பணியில் முதல்முறையாக கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த சிகப்பு நிற மண்பானை 25 செ.மீ. உயரமும், 12.5 செ.மீ. அகலமும் கொண்டதாகும். தரையில் இருந்து 18 செ.மீ. ஆழத்தில் இந்த பானை கிடைக்கப்பெற்றது. மேலும் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட அரண்மனையின் தொடர்ச்சியாக 22 அடுக்கு கொண்ட செங்கல் சுவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யானை தந்தத்தால் ஆன மனித உருவத்தின் இடுப்பிற்கு கீழே உள்ள பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உருவத்தின் உயரம் 1.8 செ.மீட்டரும், அகலம் 1.5 செ.மீட்டரும், இதன் எடை 1 கிராம் 100 மில்லியும் உள்ளது. சோழர்களின் கலையை பின்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் அணிகலன்கள், ஆடை அலங்காரங்கள் போன்ற அமைப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. முதல் கட்ட அகழ்வாராய்ச்சியின் போது செங்கல் அமைப்பு மற்றும் ஏராளமான அலங்காரத்துடன் கூடிய கூரை ஓடுகள், அரண்மனையின் கட்டமைப்பு எச்சங்கள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பழங்கால பொருட்கள்...

இதுவரை இந்த அகழ்வாராய்ச்சி பணியில் கிடைத்த பழங்கால பொருட்களில் சீன மண்பாண்டங்கள், செப்பு நாணயங்கள் மற்றும் செம்பு பொருட்கள், இரும்பு ஆணிகள், கண்ணாடி மணிகள் மற்றும் வளையல்கள், அலங்கரிக்கப்பட்ட கற்கள் ஆகியவையும் அடங்கும். நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்நமண்டி ஆகிய ஊர்களில் அகழ்வாராய்ச்சி பணிகளை தொடங்கி வைத்தார். இதையடுத்து கங்கைகொண்ட சோழபுரம் அருகே உள்ள மாளிகைமேடு பகுதியில், நேற்று உடையார்பாளையம் கோட்டாட்சியர் பரிமளம் முன்னிலையில் 3-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி தொடங்கியது. இதில் 20-க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த பணியானது செப்டம்பர் மாதம் இறுதி வரை நடைபெறும் என்றும், 3-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியில் ஏராளமான பொருட்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதில், கங்கைகொண்ட சோழபுரம் அகழாய்வு இயக்குனர் பிரபாகரன், தொல்லியல் அலுவலர் சுபலெட்சுமி, ஆய்வு மாணவர் கோமதி அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com