தஞ்சை பெரிய கோவிலில் வண்டுகள் கடித்ததில் ஆந்திர பக்தர்கள் 4 பேர் மயக்கம்

வனத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் கதண்டு எனப்படும் பெரிய வகை வண்டுக் கூட்டை முழுமையாக அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சை பெரிய கோவிலில் வண்டுகள் கடித்து 4 ஆந்திர பக்தர்கள் மயக்கம்.
தஞ்சை பெரிய கோவில்
Published on

தஞ்சாவூர்,

தஞ்சாவூர் மாவட்டம் பெரிய கோவிலில் கதண்டு எனப்படும் பெரிய வகை வண்டு கடித்ததில் ஆந்திர பக்தர்கள் 4 பேர் மயக்கமடைந்தனர்.

யாகப் புகை

தஞ்சாவூர் உலகப் புகழ்பெற்ற பெரிய கோயில் வளாகத்தில் இன்று விசேஷ யாகம் ஒன்று நடைபெற்றது. இந்த யாகக் குண்டத்திலிருந்து அதிகளவில் புகை வெளியேறியது. இந்த அடர்ந்த புகை அருகில் இருந்த மரத்தில் கட்டப்பட்டிருந்த வண்டுகள் கூட்டின் மீது பட்டுள்ளது. இதனால் ஆவேசமடைந்த வண்டுகள் கூட்டம் கூட்டமாக கலைந்து பறந்தன. அப்போது கோயிலில் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்த பக்தர்கள் மீது கதண்டுகள் திடீரென தாக்குதல் நடத்தின.

4 பேர் மயக்கம்

வண்டுகள் கொட்டியதில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உட்பட 4 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தனர். இதனால் கோயில் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மயக்கமடைந்த பக்தர்களை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வனத்துறையினர் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் கதண்டுக் கூட்டை முழுமையாக அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com