

சென்னை,
சென்னையில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தின் பெயரில் போலியான ஆவணங்களை உருவாக்கி பிற தனியார் நிறுவனங்களில் இருந்து பொருட்களை கொள்முதல் செய்து ரூ.35 லட்சம் வரை மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட நிறுவனம் ஒன்று போரூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தது. புகாரின் பேரில், போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியில் தொடர்புடையவர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் மோசடி சம்பவத்தில் தொடர்புடைய அம்பத்தூரை அடுத்த மாத்தூர் பகுதியை சேர்ந்த அப்துல் ரகீம் (40 வயது), அவரது மனைவி ஆஷிகா (35 வயது) மற்றும் இவர்களது உறவினர்களான முக்தார் அகமது, ஜாகீர் உசேன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியான.
மோசடியில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அப்துல் ரகீம், சென்னையில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து பின்னர் வேலையில் இருந்து நின்றுள்ளார். இந்த நிலையில் அதே நிறுவனத்தின் பெயரில் போலியான லெட்டர் பேட் மற்றும் ஜி.எஸ்.டி எண்களை தயாரித்துள்ளார். இந்த போலி ஆவணங்களை பயன்படுத்தி, நிறுவனத்திற்கு உதிரிபாகங்கள் தேவைப்படுவதாகக் கூறி பல நிறுவனங்களிடம் இருந்து பொருட்களை பெற்றுள்ளார். ஆனால், அதற்கான பணத்தை செலுத்தாமல் மோசடி செய்துள்ளார். மேலும் மோசடி செய்து பெறப்பட்ட உதிரிபாகங்களை, விற்று பணமாக்கியுள்ளனர்.
கைதான அப்துல் ரகீம் ஏற்கனவே இதேபோன்ற மோசடி குற்றங்களில் ஈடுபட்டு, சைபர் கிரைம் போலீசாரால் 2 முறை கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர் மோசடி மற்றும் அதிகப்படியான பண பரிவர்த்தனைகள் காரணமாக அப்துல் ரகீமின் வங்கி கணக்கை போலீசார் ஏற்கனவே முடக்கியிருந்தனர். இதனால், அவர் தனது மனைவி ஆஷிகாவின் வங்கி கணக்கை பயன்படுத்தியுள்ளார்.
அவரது வங்கி கணக்கும் முடக்கப்பட்டதால், தனது உறவினர்களான முக்தார் அகமது மற்றும் ஜாகீர் உசேன் ஆகியோரின் வங்கி கணக்குகளை பயன்படுத்தி பணபரி வர்த்தனைகளை தொடர்ந்துள்ளார். இதற்கு உடந்தையாக இருந்ததால் அவர்களும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஆஷிகாவிற்கு தற்போது 11 மாத குழந்தை ஒன்று உள்ளது. சட்ட விதிகளின்படி, அந்த 11 மாத குழந்தையுடன் ஆஷிகா மற்றும் அவரது கணவர் உட்பட 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.