

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் பகுதியில் கார் கண்ணாடியை உடைத்து கேமரா, அதன் பாகங்களை திருடிய 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து திருடப்பட்ட கேமரா, லென்ஸ் உள்பட ரூ.6.5 லட்சம் மதிப்பிலான பொருட்களை மீட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு திருவிழாவை வீடியோ எடுப்பதற்காக கடந்த 19.10.2026 அன்று, கோயம்புத்தூரை சேர்ந்த ஜோதிபாஸ்கர் மகன் தரணிதரன் (வயது 31) என்பவர் தனது காரில் குலசேகரன்பட்டினம் வந்தவர், குலசையில் இருந்து மணப்பாடு இ.சி.ஆர். ரோடு (ECR) பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகில் தனது காரை நிறுத்திவிட்டு, கேமரா மற்றும் லென்ஸ் போன்ற பொருட்களை காருக்குள் வைத்து, பூட்டி விட்டு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்க்கும்போது காரின் கண்ணாடி கதவுகள் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த கேமரா மற்றும் லென்ஸ் போன்ற பொருட்கள் திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்து தரணிதரன் அளித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகள் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டனர். அதில் திருச்சியை சேர்ந்தவர்களான அபுதாஹிர் மகன் சித்திக்(43), ராமலிங்கம் மகன் தனபால்(51), கோவிந்த் மகன் விக்கி(எ) நடராஜன்(30) மற்றும் சேகர் மகன் பிரபாகரன்(45) ஆகியோர் தரணிதரன் காரில் இருந்த கேமரா மற்றும் லென்ஸ் போன்றவற்றை திருடியது தெரியவந்தது.
இதனையடுத்து குலசேகரன்பட்டினம் காவல் நிலைய போலீசார் சித்திக், தனபால், விக்கி(எ) நடராஜன் மற்றும் பிரபாகரன் ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.6 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பிலான கேமரா மற்றும் லென்ஸ் போன்ற பொருட்களை பறிமுதல் செய்தனர்.