சென்னையில் பல்வேறு இடங்களில் செல்போன் பறித்த 4 பேர் கைது; 16 வயது சிறுமியும் சிக்கினார்

சென்னையில் பல்வேறு இடங்களில் செல்போன் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். அந்த கும்பலுடன் 16 வயது சிறுமியும் சிக்கினார்.
சென்னையில் பல்வேறு இடங்களில் செல்போன் பறித்த 4 பேர் கைது; 16 வயது சிறுமியும் சிக்கினார்
Published on

சென்னை கோபாலபுரம், ஆழ்வார்ப்பேட்டையில் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து செல்போன் பறிப்பு சம்பவம் நடைபெற்று வந்தது. இது தொடர்பாக ராயப்பேட்டை, அபிராமபுரம் போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டன. செல்போன் பறிப்பு கும்பலை பிடிப்பதற்காக ராயப்பேட்டை உதவி கமிஷனர் சார்லஸ் சாம்துரை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார், செல்போன் பறிப்பு நடந்த இடங்கள் மற்றும் குற்றவாளிகள் தப்பிச் சென்ற வழியில் உள்ள 42 கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விடுதியில் தங்கி இருந்த 4 வாலிபர்கள், 16 வயது சிறுமியை கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் தேனாம்பேட்டையை சேர்ந்த விவேக் என்ற குள்ளா (வயது 26), ஜெகன் (25), கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த ஜெகதீசன் (24), தூத்துக்குடியை சேர்ந்த சரவண பெருமாள் (19) என்பதும், இந்த செல்போன் வழிப்பறிக்கு மூளையாக செயல்பட்டது 16 வயது சிறுமி என்ற அதிர்ச்சி தகவலும் கிடைத்தது.

இந்த வாலிபர்களும், சிறுமியும் சமூக வலைத்தளம் மூலம் அறிமுகமாகி உள்ளனர். பின்னர் ஆடம்பரமாகவும், உல்லாசமாகவும் ஊர் சுற்றுவதற்காக இவர்கள் ராயப்பேட்டை, அபிராமபுரம், ஆயிரம்விளக்கு, கிண்டி, கோட்டூர்புரம் வேளச்சேரி, எழும்பூர், நுங்கம்பாக்கம், அண்ணாசாலை ஆகிய போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட இடங்களில் 16 செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்தது. பின்னர் சிறுமி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com