குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகன டயர்களை திருடிய 4 பேர் கைது

குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகன டயர்களை திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகன டயர்களை திருடிய 4 பேர் கைது
Published on

திருவள்ளூரில் உள்ள குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் ஹேமலதா (பொறுப்பு), சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் போலீஸ்காரர் வெற்றிவேல் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு திருவள்ளூர் அடுத்த காக்களூர் பழைய கலெக்டர் அலுவலக வளாகம் வழியாக ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வளாகத்திற்கு உள்ளே சாலையோரத்தில் சந்தேகப்படும்படியாக தனியார் பஸ் ஒன்று நின்றுக்கொண்டிருந்தது. போலீசார் பஸ் அருகே சென்றபோது 4 பேர் பஸ்சுக்குள் வாகனங்களின் டயர்களை ஏற்றிக்கொண்டு இருப்பது தெரிந்தது.

இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாரால் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் இருந்து ரிம்முடன் கூடிய டயர்களை திருடியதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்து திருவள்ளூரில் உள்ள குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் போலீசாரால் கைது செய்யப்பட்டவர்கள் திருவள்ளூர் அடுத்த ஈக்காடு கிராமம் வாலியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தனியார் கம்பெனி பஸ் டிரைவர் அஸ்வந்த் (வயது 26), கள்ளக்குறிச்சி மாவட்டம் நேப்பால் தெருவை சேர்ந்த தனியார் கம்பெனி ஊழியரான வெங்கடேஷ் ( 24), விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த தனியார் கம்பெனி ஊழியரான அசோக்குமார் ( 21), நீலமங்கலம் மெயின் ரோட்டை சேர்ந்த தனியார் கம்பெனி ஊழியரான நவீன் (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து திருடப்பட்ட ஜாக்கி, இரும்பு ஸ்பேனர், இரும்பு கம்பிகள், கட்டிங் பிளேயர், வாகனங்களின் டயர்கள் மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்திய தனியார் நிறுவன பஸ் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com