

திருநெல்வேலி,
திசையன்விளை அருகே ரூ.75 லட்சம் மதிப்பிலான காப்பர் ஒயர்கள் திருட்டு வழக்கில் ஏற்கனவே 6 பேர் கைது செய்த நிலையில், மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டு, 1,027 கிலோ காப்பர் ஒயர்கள் மற்றும் ரூ.1.92 லட்சம் ரொக்கப் பணம் மீட்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முடவன்குளத்தில் செயல்பட்டு வரும் தனியார் சோலார் மின் உற்பத்தி நிறுவனத்தில், நாகர்கோவிலைச் சேர்ந்த ஏ.கே. ஆனந்த் (வயது 40) என்பவர் மேலாளராகப் பணியாற்றி வருகிறார்.
கடந்த 1.10.2026 அன்று மாலை, சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்காக நிறுவனத்தின் ஸ்டோர் ஷெட்டில் வைக்கப்பட்டிருந்த காப்பர் ஒயர்கள் மற்றும் மின்சாதனப் பொருட்களைப் பூட்டி வைத்துள்ளனர். மறுநாளான 2.10.2026 அன்று அதிகாலை 5.30 மணியளவில் பார்த்தபோது, ஸ்டோர் ஷெட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.75 லட்சம் மதிப்பிலான காப்பர் ஒயர்கள் மற்றும் எர்த் ராடுகள் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து நிறுவன மேலாளர் அளித்த புகாரின் பேரில், திசையன்விளை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திசையன்விளை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் எழில் சுரேஷ்சிங் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், இந்த திருட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய தலைவன்விளையைச் சேர்ந்த சக்திவேல்(24), சத்தியராகவன்(23), அஜித்குமார்(28), லோகேஷ்(28) மற்றும் திசையன்விளையைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன்(28), சங்கர்(21) ஆகிய 6 பேர் கண்டறியப்பட்டு, 15.10.2026 மற்றும் 16.10.2026 ஆகிய தேதிகளில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரைப் பிடிக்க, வள்ளியூர் உட்கோட்ட டி.எஸ்.பி. வெங்கடேஷ் மேற்பார்வையில், திசையன்விளை காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மாதவராஜா தலைமையிலான போலீசார் தீவிர தேடுதல் மற்றும் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், இத்திருட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 4 நபர்களான திசையன்விளையைச் சேர்ந்த சக்திவேல்(24), தலைவன்விளையைச் சேர்ந்த திலகராஜ்(28), சரண்(25) மற்றும் சுஜித்ரன்(26) ஆகியோரை நேற்று முன்தினம் (18.10.2026) போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்றக் காவலுக்கு அனுப்புவதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், இக்குற்றச் சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட 3 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 2 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், ரூ.1 லடசத்து 92 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் 1,027 கிலோ காப்பர் ஒயர்களும் மீட்கப்பட்டுள்ளன.