தாம்பரம் அருகே பா.ஜனதா பிரமுகர் கொலையில் 4 பேர் கைது

தாம்பரம் அருகே பா.ஜனதா பிரமுகர் கொலையில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். நண்பரே எதிரியாக மாறி தீர்த்து கட்டியது தெரிந்தது.
தாம்பரம் அருகே பா.ஜனதா பிரமுகர் கொலையில் 4 பேர் கைது
Published on

தாம்பரம்,

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள பழைய பெருங்களத்தூர் காமராஜர் தெருவை சேர்ந்தவர் பீரி வெங்கடேசன் (வயது 33). பழைய குற்றவாளியான இவர் மீது பீர்க்கன்காரணை போலீஸ் நிலையத்தில் 2015-ம் ஆண்டு கொலை வழக்கு உள்ளது. பா.ஜனதா கட்சியின் பெருங்களத்தூர், முடிச்சூர் மண்டல பட்டியல் அணி தலைவராகவும் இருந்து வந்தார்.

இந்தநிலையில் பெருங்களத்தூர் குட்வில் நகர் பகுதியில் உள்ள காலி மைதானத்தில் பீரி வெங்கடேசன் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது முகம் சிதைக்கப்பட்டு இருந்தது. இதுபற்றி பீர்க்கன்காரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

4 பேர் கைது

இந்தநிலையில் சதானந்தபுரம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கொலையாளிகளின் காரை போலீசார் மடக்கி பிடித்து அதில் இருந்தவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

அதில் அவர்கள், பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த குணா என்ற குணசேகரன் (32), முடிச்சூரை சேர்ந்த சதீஷ்குமார் (22), அருண் (29), தாம்பரம், கடப்பேரியை சேர்ந்த சந்துரு (22) என்பது தெரிந்தது. 4 பேரையும் போலீசார் கைது செய்து மேலும் விசாரித்தனர்.

2015-ம் ஆண்டு புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்த ராஜா என்பவரை கொலை செய்த வழக்கில் பீரி வெங்கடேசனும், அவருடைய நண்பரான குணாவும் கைதானார்கள். அதன் பிறகு குணா தலைமையில் பெருங்களத்தூர் பகுதியில் ரவுடி கோஷ்டி உருவானது. குணாவுக்கு மிகவும் நெருக்கமான நண்பனாக பீரி வெங்கடேசன் இருந்தார்.

நண்பர்களுக்குள் பகை

அதன்பிறகு குணாவும், பீரி வெங்கடேசனும் தனித்தனியாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தனர். இதில் புறம்போக்கு நிலங்களை விற்பனை செய்வதில் நண்பர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டது.

ரியல் எஸ்டேட் தரகர்கள் சிலரும் குணா மற்றும் பீரி வெங்கடேசனிடம் ஒருவரை ஒருவர் கொலை செய்ய திட்டமிட்டுவதாக மாற்றி கூறி இருவருக்கும் இடையே பகையை உருவாக்கினர். இதனால் இருவரும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு கொலை செய்ய ரகசியமாக திட்டமிட்டு வந்தனர்.

சிறையில் அடைப்பு

இந்தநிலையில்தான் விநாயகர் சதுர்த்தி அன்று இரவு பழைய பெருங்களத்தூர் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே குணா மற்றும் பீரி வெங்கடேசன் இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசினர். பின்னர் மது அருந்தலாம் என கூறி குணா மற்றும் அவரது கூட்டாளிகளான சதீஷ்குமார், அருண், சந்துரு ஆகியோர் காரில் பீரி வெங்கடேசனை பெருங்களத்தூர் குட்வில் நகர் பகுதிக்கு அழைத்துச்சென்று அங்குள்ள காலி நிலத்தில் அமர்ந்து மது அருந்தினர்.

அப்போது குணா, பீரி வெங்கடேசனிடம் "என்னை கொலை செய்து விடுவதாக கூறினாயா?" என கேட்டார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த குணா மற்றும் அவரது கூட்டாளிகள் பீரி வெங்கடேசனை வெட்டிக்கொன்று விட்டு, அடையாளம் தெரியாமல் இருக்க முகத்தை சிதைத்துவிட்டு தப்பியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கைதான 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com