ஸ்ரீவைகுண்டத்தில் கொலை வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கு ஆயுள் தண்டனை


ஸ்ரீவைகுண்டத்தில் கொலை வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கு ஆயுள் தண்டனை
x

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 30 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

கடந்த 2012ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வெல்லூர் பகுதியைச் சேர்ந்த கடற்கரையாண்டி மகன் ஆறுமுகராஜா (வயது 43) என்பவரை முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்தவர்களான வடிவு மகன் காசி(42), கந்தையா மகன் இசக்கிமுத்து(36), இசக்கிமுத்து மகன் கண்ணன்(எ) கண்ணபெருமாள்(45), சொக்கலிங்கம் மகன் தளவாய்(45), முத்துப்பாண்டி மகன் சிவா(எ) சிவலிங்கம்(34) மற்றும் பேச்சிபாண்டி மகன் துரைமுத்து ஆகியோர் சேர்ந்து அவரது வீடு புகுந்து சாதிப்பெயரை சொல்லி அரிவாளால் தாக்க முயன்றும் அவரது தாயாருக்கு கொலை மிரட்டலும் விடுத்த வழக்கில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அப்போதைய ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட டி.எஸ்.பி. விசாரணை மேற்கொண்டு வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு மேற்சொன்ன ஆறுமுகராஜா ஸ்ரீவைகுண்டம் பகுதியில் நின்று கொண்டிருந்த போது மேற்சொன்ன நபர்களில் கண்ணனை தவிர மற்ற நபர்கள் சேர்ந்து மீண்டும் ஆறுமுகராஜாவிடம் தகராறு செய்து அவரை அரிவாளால் தாக்கி கொலை செய்தனர். இதனையடுத்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மேற்சொன்ன 2 வழக்குகளின் விசாரணை தூத்துக்குடி சிவில் உரிமை பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வசித்குமார் நேற்று (24.12.2025) மேற்சொன்ன குற்றவாளிகளில் துரைமுத்து உயிரிழந்த நிலையில் மற்ற குற்றவாளிகளான இசக்கிமுத்து, தளவாய், சிவா(எ) சிவராமலிங்கம் ஆகிய 3 பேருக்கும் தலா மூன்று ஆயுள்தண்டனை, தலா ரூ.13 ஆயிரம் அபராதமும், காசி என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை ரூ.7 ஆயிரம் அபராதமும், கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட கண்ணன் என்பவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.12 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட டி.எஸ்.பி. விஜயகுமார், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் மோகன்தாஸ், விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் சந்திரா ஆகியோரை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 30 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

1 More update

Next Story