

சென்னை
இந்தியாவில் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை பிரைவேட் சர்வர் மூலமாக விளையாடி, அதை யூடியூப் வலைதளத்தில் ஸ்ட்ரீமிங் செய்து வருபவர் மதன். இவரது யூடியூப் சேனலை லட்சக்கணக்கானோர் பின்தொடர்கின்றனர். அதில் பெரும்பாலானோர் பப்ஜி விளையாட்டால் ஈர்க்கப்பட்ட 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் தான் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஆன்லைன் விளையாட்டின் போது பெண்களிடம் ஆபாசமாக பேசியதாக மதன் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் இதுவரை இவர் மீது 159 புகார்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. மதன் மீது அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து மதனை கைது செய்வதற்காக அவரது சொந்த ஊரான சேலத்திற்கு போலீசார் சென்ற போது, அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதையடுத்து அவரது மனைவி கிருத்திகா மற்றும் அவரது தந்தை ஆகிய இருவரையும் விசாரணைக்காக சென்னை அழைத்து வந்த போலீசார், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த விசாரணையில் மதனின் 2 யூடியூப் சேனல்களுக்கும் அவரது மனைவி கிருத்திகா தான் நிர்வாகி என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கிருத்திகாவை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
பப்ஜி மதன் ஆபாசமாக பேசி சம்பாதித்த பணத்தில் வாங்கிய 2 ஆடி கார்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மனைவி கிருத்திகா வங்கிக்கணக்கில் ரூ.4 கோடி இருப்பதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த யூ- டியூபர் மதனை தர்மபுரியில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.