4 நாட்கள் சுற்றுப்பயணம்.. நாளை மதுரையில் பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி


4 நாட்கள் சுற்றுப்பயணம்.. நாளை மதுரையில் பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி
x

கோப்புப்படம்

மதுரையில் நாளை முதல் 4 நாட்கள், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

மதுரை


அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற முழக்கத்தோடு பிரசார பயணத்தை மேற்கொண்டு வருகிறார். 4-வது கட்ட பயணத்தை நாளை (1-ந் தேதி) மதுரையில் இருந்து தொடங்குகிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் நாளை காலையில் மதுரை வருகிறார்.

வேலம்மாள் மருத்துவக்கல்லூரி அருகே உள்ள தனியார் ஓட்டலில் தங்குகிறார். மாலை 5 மணிக்கு திருப்பரங்குன்றத்தில் 16 கால் மண்டபம் பகுதியில் பேசுகிறார். 6.30 மணிக்கு திருமங்கலம் அருகே டி.குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோவிலில் பேசுகிறார்.

2-ந் தேதி காலை மதுரையில் உள்ள ஒரு ஓட்டலில் உணவு உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள், தொழில் அதிபர்கள் உள்ளிட்டவர்களுடன் கலந்துரையாடுகிறார். அன்று மாலை 5 மணிக்கு மேலூர் பஸ் நிலையத்திலும், மாலை 6.30 மணிக்கு ஒத்தக்கடை பகுதியிலும், இரவு 8 மணிக்கு புதூர் பஸ் நிலையத்திலும் பேசுகிறார்.

3-ந் தேதி மாலை 5 மணிக்கு பழங்காநத்தம் ஜெயம் தியேட்டர் பகுதியிலும், மாலை 6.30 மணிக்கு டி.எம்.கோர்டு பகுதியிலும், இரவு 8 மணிக்கு தினமணி தியேட்டர் பகுதியிலும், 4-ந் தேதி மாலை 5 மணிக்கு வாடிப்பட்டி பஸ் நிலையம் பகுதியிலும், இரவு 7 மணிக்கு உசிலம்பட்டி தி.விளக்கு பகுதியிலும் என 10 தொகுதிகளிலும் பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார்.

இதற்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட செயலாளர்களான முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. மற்றும் பெரியபுள்ளான் எம்.எல்.ஏ. உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

1 More update

Next Story