4 நாட்கள் முழு ஊரடங்கு எதிரொலி: கோயம்பேடு மார்க்கெட்டில் அலைமோதிய மக்கள் கூட்டம் - சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் தள்ளுமுள்ளு

சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 4 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.
4 நாட்கள் முழு ஊரடங்கு எதிரொலி: கோயம்பேடு மார்க்கெட்டில் அலைமோதிய மக்கள் கூட்டம் - சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் தள்ளுமுள்ளு
Published on

சென்னை,

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக வருகிற 3-ந்தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும் காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க காலை 6 மணிமுதல் மதியம் 1 மணிவரை நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதாக கூறி வெளியே சுற்றித்திரிந்து வருகின்றனர். ஊரடங்கு அமல்படுத்தி ஒரு மாதம் ஆன பிறகும் பொதுமக்கள் மத்தியில் கொரோனா வீரியம் புரியவில்லை.

இந்தநிலையில் கொரோனா தொற்று பரவும் அபாயம் அதிகமாக உள்ளதால் சென்னை, மதுரை, கோவை மாநகராட்சிகளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 4 நாட்களும், சேலம், திருப்பூர் மாநகராட்சிகளில் 3 நாட்களும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இந்தநிலையில் நேற்று விடிந்த உடனேயே அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டினர். அதேவேளை ஆபத்தை உணராமல் மக்கள் கூட்டம் கூட்டமாக பொருட்கள் வாங்க கடைகளில் குவிந்தனர். சென்னை கோயம்பேடு காய்கறி, பழ மற்றும் பூ மார்க்கெட்டில் நேற்று மக்கள் அதிகளவில் குவிந்தனர்.

ஒருவரையொருவர் இடித்துக்கொண்டும், தள்ளிவிட்டுக்கொண்டும் காய்கறி வாங்க ஆர்வம் காட்டினர். மார்க்கெட்டின் இருபுறமும் இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள் அணிவகுத்து நிறுத்தப்பட்டிருந்தன. கொரோனா வீரியம் புரியாமல், முக கவசம் கூட அணியாமல், சமூக இடைவெளி என்றால் என்னவென்றே தெரியாமல் மக்கள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு படையெடுத்தனர். சமூக இடைவெளியை கவனத்தில் கொள்ளுங்கள் என்று போலீசார் எச்சரித்தாலும், பொதுமக்கள் அதை கண்டுகொள்ளாமல் காய்கறி வாங்குவதிலேயே குறியாக இருந்தனர்.

தக்காளிக்கு கடும் கிராக்கி

கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் காலை 11 மணிக்கே பெரும்பாலான காய்கறிகள் விற்று தீர்ந்தன. குறிப்பாக 11 மணிக்கு மேல் எந்த கடைகளிலும் தக்காளி கிடைக்கவே இல்லை. அதேபோல பச்சை பட்டாணி, சிறிய பாகற்காய் உள்ளிட்ட காய்கறிகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இருப்பினும் வெளிச்சந்தைகளில் கூடுதல் விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டது.

திருவான்மியூர், வியாசர்பாடி அம்பேத்கர் கலை கல்லூரி, சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காக்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட்டிலும் மக்கள் சாரை சாரையாக வந்து காய்கறி வாங்கி சென்றனர். அதேபோல திரு.வி.க.நகர், அமைந்தகரை, சைதாப்பேட்டை, பெரம்பூர் உள்ளிட்ட காய்கறி மார்க்கெட்டுகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

மளிகை கடைகளில்...

காய்கறி மார்க்கெட் போல மளிகை கடைகளிலும் மக்கள் குவிந்தனர். திருவான்மியூர், ராயப்பேட்டை, புரசைவாக்கம், அண்ணா நகர், மயிலாப்பூர், அடையாறு, அமைந்தகரை, தேனாம்பேட்டை உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் உள்ள மளிகை கடைகளிலும், சூப்பர் மார்க்கெட்டுகளிலும் மக்கள் கூட்டம் காணப்பட்டது. ஆனாலும் பெரும்பாலான மளிகை கடைகளில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தது நீண்ட வரிசையில் காத்திருந்து பொருட்கள் வாங்கி சென்றனர்.

ஆலந்தூர், ஆதம்பாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், பல்லாவரம், தாம்பரம் உள்பட புறநகர் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் நேற்று காலை முதல் கடைகளில் குவிந்தனர். இதனால் காய்கறி, இறைச்சி உள்ளிட்ட கடைகளில் நீண்ட வரிசையில் பொதுமக்கள் நின்று வாங்கி சென்றனர்.

ஊரடங்கு போல் இல்லாமல் இயல்பு நிலை திரும்பி விட்டதா? என்று எண்ணும் அளவுக்கு சாலையிலும், கடைகளிலும் பொதுமக்கள் கூட்டம் காணப்பட்டது.

அதேபோல முட்டை வாங்குவதிலும் பொதுமக்கள் ஆர்வம் காட்டினர். முட்டை கடைகளில் அட்டை அட்டையாக முட்டைகளை வாங்கி சென்ற பொதுமக்களை பார்க்க முடிந்தது. ஆவின் பால் விற்பனை நிலையங்களிலும் நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் பால் வாங்கி சென்றனர்.

ஊரடங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேவையான பொருட்கள் வாங்கிவிட வேண்டும் என்ற மனநிலைக்கு மக்கள் வந்ததால் நேற்று சாலைகளில் மக்கள் நடமாட்டமும், வாகன ஓட்டமும் அதிகரித்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com