

தூத்துக்குடி,
தூத்துக்குடி கோமாஸ்புரம் மயானக்கரை பகுதியில் விற்பனைக்காக 4 கிலோ 100 கிராம் கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார், கோமாஸ்புரம் மயானக்கரை பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றிக் கொண்டிருந்த வாலிபரைப் பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அதில் அந்த வாலிபர், விற்பனைக்காக பைகளில் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் தூத்துக்குடி சிலுவைப்பட்டியைச் சேர்ந்த மாதவன் மகன் ஜெயசூர்யா (வயது 19) என்பது தெரியவந்தது. இவர் கேரளம் மாநிலத்திலிருந்து கஞ்சாவை வாங்கி வந்து, தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறுசிறு பொட்டலங்களாகப் போட்டு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.